Published : 15 Jan 2021 07:09 PM
Last Updated : 15 Jan 2021 07:09 PM

மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம்

சென்னை

மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் 2017-ம் ஆண்டு தொடங்கினார். அக்கட்சியின் சின்னமாக பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டது.

அதில் மக்கள் நீதி மய்யம் தென்சென்னை, வடசென்னை, கோவை உள்ளிட்ட பல தொகுதிகளில் லட்சக்கணக்கில் வாக்குகளைப் பெற்றது. இதனால் 4-ம் இடத்தைப் பிடித்தது. மொத்தமாக 38 தொகுதிகளில் 15,62,316 வாக்குகளைப்பெற்ற மக்கள் நீதி மய்யம் 4 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றது. இது மொத்த வாக்கு சதவீதத்தில் 3.7% ஆகும்.

பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயாராகிவிட்டது. நல்லவர்கள் தமது கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் கட்சிகளுக்கான தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதில் மக்கள் நீதி மய்யத்துக்குப் புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது. தமிழகத்தில் பேட்டரி டார்ச் லைட் சின்னம் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்தச் சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இது தொடர்பாக பதிலளிக்க அவகாசம் தேவை என தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.2-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டதாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். 234 தொகுதிகளுக்கும் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு கமல் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பும் காட்சியைக் காணொலியாக வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு:

“மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளி பாய்ச்சப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த நாளில் இது நிகழ்ந்திருக்கிறது.

— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2021


இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்”.

இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x