

காரைக்கால் சந்திர புஷ்கரணியில் (காரைக்கால் அம்மையார் குளம்) ரங்கநாயகி தாயார் தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று (ஜன.15) நடைபெற்றது.
கனுப் பொங்கலையொட்டி காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் கனுப்பொடி (கலவை சாதம்) வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாயகி தாயார் கோயில் வடக்கு வாசல் பகுதியில் சந்திர புஷ்கரணி அருகில் எழுந்தருளச் செய்யப்பட்டார். தொடர்ந்து பட்டாச்சாரியார்களால் சந்திர புஷ்கரணிக்கு சடாரி கொண்டு செல்லப்பட்டு, அங்கு கனுப் பொடி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, சடாரிக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சடாரியுடன் சந்திர புஷ்கரணியில் இறங்கி பட்டாச்சாரியார் நீராடினார். அவரைத் தொடர்ந்து பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர். தொடர்ந்து ரங்கநாயகி தாயாருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல காரைக்கால் கைலாசநாதர் கோயிலிலிருந்து கனுப் பொடி வைக்க ஆடிப்பூரத்தம்மன் சந்திர புஷ்கரணிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. பக்தர்கள் பலர் பங்கேற்று வழிபட்டனர்.
ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் அறங்காவல் வாரியத்தினர் மற்றும் நித்ய கல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.