Published : 15 Jan 2021 06:04 PM
Last Updated : 15 Jan 2021 06:04 PM

திமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும் தேர்தலில் அவர்கள் சதியை மக்கள் முறியடிப்பார்கள்: ஸ்டாலின் 

சென்னை

திமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது அண்ணாவின் உறுதிமொழியாக இருந்தது. என்னதான் திட்டமிட்டு சதி செய்து திமுக மீது பழி சுமத்திக் கொண்டு இருந்தாலும், எதிர்வரும் தேர்தலில் தமிழக மக்கள் நிரூபித்துக் காட்டத்தான் போகிறார்கள் என ஸ்டாலின் பேசினார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று மாலை, திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட கோணாம்பேடு கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

“நம்மை ஏதோ கோயிலுக்கு எதிரி போல் சித்தரிக்கிறார்கள். "கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது" என்று தலைவர் கருணாநிதி ‘பராசக்தி’யில் சிவாஜியின் முதலாவது வசனத்திலேயே சொன்னார். அதைப் புரிந்துகொள்ளாமல் பாஜக, ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் திட்டமிட்டு திமுக ஏதோ இந்துக்களுக்கு எதிரி போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல.

இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது. திமுகவில் இருக்கக்கூடிய பல மாவட்டச் செயலாளர்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார்கள். அந்தப் பக்தியை நாங்கள் குறை சொல்லத் தயாராக இல்லை. அது அவர்களுடைய விருப்பம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது அண்ணாவின் உறுதிமொழியாக இருந்தது. அதைத்தான் இன்று நாமும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

என்னதான் திட்டமிட்டு சதி செய்து திமுக மீது பழி சுமத்திக் கொண்டு இருந்தாலும், அவையெல்லாம் எடுபடாது என்பதை எதிர்வரும் தேர்தலில் தமிழக மக்கள் நிரூபித்துக் காட்டத்தான் போகிறார்கள்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x