Published : 15 Jan 2021 01:59 PM
Last Updated : 15 Jan 2021 01:59 PM

உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது: சீறிப் பாய்ந்த காளை முட்டியதில் மாடுபிடி வீரர் படுகாயம்

சென்னை

உலக பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தை இரண்டாம் நாளில் நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. சீறிப் பாய்ந்த காளைகளைக் காளையர்கள் அடக்கினர். இதில் ஆய்வாளர், மாடுபிடி வீரர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

தற்போது வாடிவாசலில் சீறிப் பாயக் காத்திருக்கும் 800 காளைகளை அடக்குவதற்கு, 649 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் குவிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை சரியாக 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. முதலில் பட்டாளம்மன் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது. பின்னர் பாலமேடு 24 மனை தெலுங்குச் செட்டியார் காளியம்மன் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதையும் யாரும் பிடிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது. அடுத்து பாலமேடு பாலமுருகன் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அடுத்து பத்ரகாளியம்மன் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்தக் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு சென்ற பின்னர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

பின்னர் கருப்பசாமி கோயில் காளை மாடு அவிழ்த்து விடப்பட்டது. ஒரு பிரிவுக்கு ஒரு மணி நேரம் என 8 குழுக்கள் மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டது. காளைகளைப் பிடிப்பவர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்காக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், வியாபார நிறுவனங்கள் எனப் பலரும் தங்கக் காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், நாற்காலி, பேன் எனப் பல பரிசுகளைக் கொடுத்தனர்.

சுற்றி விளையாடும் மாடுகள், அதிக காளைகளை அடக்கும் இளைஞர்கள் ஆகியோரைத் தேர்வு செய்து சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பிட்ட தூரம் வரை மாட்டின் திமிலைப் பிடித்தபடி சென்றால் மட்டுமே மாடு பிடிமாடாகக் கருதப்படும் எனப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள 800 காளைகள் பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் போட்டியில் கலந்துகொண்டன. 3 வயது முதல் 8 வயது வரை உள்ள காளைகள், நல்ல உடல் நிலையில் உள்ள காளைகளைக் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து அனுமதித்தனர்.

பால்மேடு ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட பார்வையாளர்களுக்கு இருபுறமும் வேலிகள் அமைத்து காளைகள் உள்ளே நுழையாமல் பாதுகாப்பு வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி என அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்பட உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்கள், காவல் ஆய்வாளர், மாட்டின் உரிமையாளர் என 6 பேர் காயம் அடைந்தனர். இதில் விலா எலும்பு முறிந்த நிலையில் பலத்த காயத்துடன் மாடுபிடி வீரர் தீபன்ராஜ் (24) மதுரை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. நேற்று பொங்கல் திருநாளை ஒட்டி, விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 26 காளைகளை அடக்கிய 2 வீரர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.

நேற்றைய போட்டியில் 8 சுற்று முடிவில் 26 காளைகளை அடக்கி ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய்யும், முத்துப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசும் முதல் இடத்தைப் பிடித்தனர். இவர்கள் இருவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் நிறுவனர் ஜி.ஆர்.கார்த்தியின் காளை சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்டது. காளையின் பெயர் வேலு. உரிமையாளருக்கு பைக்கும், பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது.

18 காளைகளை அடக்கி அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி என்ற மாடுபிடி வீரர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தமாக 58 பேர் காயமடைந்தனர். இதில், 46 பேர் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் 10 பேர், பார்வையாளர் 2 பேர் ஆவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x