Published : 15 Jan 2021 12:12 PM
Last Updated : 15 Jan 2021 12:12 PM

டெல்டா உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை; நீரில் மூழ்கி நாசமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு: மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமெனவும், இயற்கை இடர்ப்பாடுகளால் அடுத்தடுத்து இழப்புகளை விவசாயிகள் சந்தித்து வருவதால் விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''கடந்த ஒரு வார காலமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பெரும்பகுதியான மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன.

மற்றும் வாழை, உளுந்து, பாசிப்பயிறு, வேர்க்கடலை உள்ளிட்ட பல வகையான பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு வழியில்லாமல் மொத்தத்தில் சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடிகள் முழுமையாக அழிந்துவிட்டன. இரண்டொரு தினங்களில் அறுவடை முடிந்து நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகள் தலையில் இடி விழுந்தது போல கலங்கியுள்ளனர்.

அறுவடைத் திருநாளான பொங்கல் விழா கொண்டாட முடியாமல் துயரத்தில் மூழ்கியுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் எட்டு வருடங்களுக்கு பிறகு மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடியிலும் அரசு முறையான கொள்முதல் செய்யாத காரணத்தினால் நெல்லை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது. கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகின.

கடந்த நவம்பர் மாதத்தில் கனமழை, நிவர் மற்றும் புரெவி புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் மூழ்கி நாசமடைந்தன. அரசின் சார்பில் வழங்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணமும் கூட எல்லாப் பகுதிகளிலும் சமமாக வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சிலருக்கு இன்னமும் கூட நிவாரணம் சென்று சேரவில்லை. இந்நிலையில் மீண்டும் இடைவிடாத மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

நெற்பயிர்கள் மழைநீரில் நனைந்து மூழ்கிப்போயுள்ளதால் விவசாயிகளும், அவர்தம் குடும்பங்களும் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீரும், கம்பலையுமாக நிற்கின்றனர். சேதமடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கிட தமிழக அரசோ, அதிகாரிகளோ இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை என்பது வேதனையான விசயமாகும். இதனால் விவசாயிகள் ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமெனவும், இயர்கை இடர்ப்பாடுகளால் அடுத்தடுத்து இழப்புகளை விவசாயிகள் சந்தித்து வருவதால் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளைத் திரட்டி மேற்கண்ட கோரிக்கைகளுக்காக இயக்கங்கள், போராட்டங்கள் நடத்திட கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x