

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இரண்டுநாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார். இவர் இங்கு நடைபெற்றுவரும் பொங்கல் விழாக்களில் பங்கேற்று வருகிறார்.
குளிர்காலத்தின் முடிவையும் அறுவடை காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவிற்கு பிரதமர், தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
தமிழகத்தைப் போலவே ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த அறுவடைத் திருநாள்விழா மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவின்போது தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார்.
ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், இரண்டுநாள் பயணமாக நேற்று (புதன்கிழமை) தமிழகம் வந்தார்.
தனது இரண்டு நாள் தமிழக பயணத்தின் போது, பொன்னியம்மன்மேடுவில் உள்ள ஸ்ரீ கடும்பாடி சின்னம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்தார், சென்னையில் நடந்த சமூக பொங்கல் கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.
சென்னையில் நடந்த பொங்கல் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பகவத் வியாழக்கிழமை கூறியதாவது:
பொங்கல் பண்டிகை கொண்டாடும் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள், இம்மாநிலத்தின் விமரிசையாக நடைபெறும் பொங்கல்விழாவில் கலந்துகொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பொங்கல் விழா தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது, இது இந்தியாவின் பிற பகுதிகளைப் போலல்லாமல், இவ்விழா நாள் முழுவதும் இங்கு கொண்டாடப்படுகிறது.
முதல்நாள் செல்வ செழிப்பின் பிரதிநிதிகளான சூரியனும், லட்சுமி தேவியும் இங்கே வணங்கப்படுகிறார்கள். இரண்டாவது நாளில் மாடுகளை தமிழக மக்கள் வணங்குகிறார்கள். மாடு நமக்கு உதவுவதோடு இயற்கையை பிரதிபலிக்கும் ஒரு ஜீவன் ஆகும்.
நமக்காக உழைக்கும் அவற்றிற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே நாம் பசுக்களையும் காளைகளையும் வணங்குகிறோம். மூன்றாம் நாள் நாம் அனைவரும் நமக்கு அறிமுகமானவர்களைச் சந்தித்து இனிப்பு சாப்பிடுகிறோம். நமது பேச்சு எல்லோரிடமும் நல்லுறவாக இருக்க வேண்டும் என்பதையே இனிப்புகள் குறிக்கின்றன.
இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்.