Published : 14 Jan 2021 02:39 PM
Last Updated : 14 Jan 2021 02:39 PM

தமிழக மக்களின் பாரம்பரியத்தை காக்க வேண்டியது என் கடமை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ராகுல்காந்தி பேச்சு

தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்க வேண்டியது என் கடமை என முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.

போட்டியை பார்க்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரம் பகுதிக்கு வந்தார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல்காந்தி நேரில் பார்த்து ரசித்தார்.
ராகுல் காந்தியுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.

ராகுல் காந்தி அருகில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் போட்டியை பார்த்தார். இருவரும் சிறிது நேரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக பேசிக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த ராகுல் காந்தி எம்பி மேடையில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

தமிழக மக்களுக்கு வணக்கம். ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் காலாச்சாரம், பாரம்பரியம் இன்றியமையாதது. அது மதிக்கப்பட வேண்டும். தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்க வேண்டியது என் கடமை. உங்களது உணர்வுகளையும், கலாசாரத்தையும், ரசித்து பாராட்டவே வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x