Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM

தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு: வைகைச்செல்வனுக்கு திருவள்ளுவர் விருது; பெரியார் விருதுக்கு தமிழ்மகன் உசேன் தேர்வு

சென்னை

தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும், 2020-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதுக்கு அ.தமிழ்மகன் உசேனும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்வளர்ச்சித் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு தேர்வானவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது - வைகைச்செல்வன்; 2020-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது - அ.தமிழ்மகன் உசேன்; அண்ணல் அம்பேத்கர் விருது - வரகூர் அ.அருணாச்சலம்; பேரறிஞர் அண்ணா விருது - மறைந்த கடம்பூர் ஜனார்த்தனன்; பெருந்தலைவர் காமராஜர் விருது- ச.தேவராஜ்; மகாகவி பாரதியார் விருது - கவிஞர் பூவை செங்குட்டுவன், பாவேந்தர் பாரதிதாசன் விருது - பாடலாசிரியர் அறிவுமதிஎன்ற மதியழகன், ‘தமிழ்த்தென்றல்’ திருவிக விருது - வி.என்.சாமி,முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - வீ.சேதுராமலிங்கம் ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதை முதல்வர் வழங்குவார்

மேற்கண்ட விருதுகள் மற்றும் இதர சிறப்பு விருதுகளை முதல்வர்வழங்குவார். விருதாளர்களுக்கு பரிசுத்தொகை ரூ.1 லட்சம், தமிழ்த்தாய் விருது பெறும் அமைப்புக்கு ரூ.5 லட்சம், தமிழ்ச்செம்மல் விருதுபெறுவோருக்கு ரூ.25 ஆயிரமும், பாராட்டுச்சான்றும் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x