Last Updated : 14 Jan, 2021 03:19 AM

 

Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM

‘லோன் ஆப்’கள் மூலம் கடன் பெற்று அவதிப்படாமல் குறைந்த வட்டியில் பாதுகாப்பாக கடன் பெறுவது எப்படி?- பொதுமக்களுக்கு ஆலோசனை தரும் வங்கி அதிகாரிகள்

சென்னை

கடன் செயலிகள் மூலம் கந்துவட்டியைவிட அதிக வட்டிக்கு கடன்வாங்கி பிரச்சினையில் சிக்காமல் இருக்க, எந்தெந்த வழிகளில் பாதுகாப்பான முறையில் கடன் பெறலாம் என வங்கி அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

கடந்த ஆண்டு பரவிய கரோனாதொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பலர் வேலைவாய்ப்பை இழந்தனர். பலர் ஊதியக் குறைப்பு, வியாபாரத்தில் நஷ்டம் எனும் பல்வேறு சிக்கல்களில் மாட்டித் தவித்தனர். இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக சில ‘லோன் ஆப்’கள் எனப்படும் கடன் செயலிகள் கடன் தந்து உதவின. குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இந்த செயலிகள் கடன் வழங்குகின்றன.

கடன் விரைவாகக் கிடைக்கிறதே என எண்ணி, இந்த செயலிகளின் பின்னணித் தன்மை குறித்து ஏதும் ஆராயாமல் பலர் கடன் வாங்கினர். ஆனால், கடன் வங்கிய பிறகுதான் தாங்கள் எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

இந்தக் கடன் செயலிகள்அனைத்தும் கடன் வாங்கியவர்களின் செல்போன்களில் உள்ள எண்கள், ஆதார் எண், டெபிட், கிரெடிட் கார்டு எண்கள், இ-மெயில், முகநூல் கணக்கு விவரங்கள் உள்ளிட்டஅனைத்து தனிப்பட்ட விஷயங்களையும் திருடி விடுகின்றன. பின்னர், அந்த விவரங்களைக் கொண்டுகடன் பெற்றவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி துன்புறுத்துகின்றன. இதில் மனமுடைந்த ஒருசிலர்தற்கொலை செய்தனர். இதையடுத்து, இத்தகைய செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி பொதுமக்களை எச்சரித்து உள்ளது.

இந்நிலையில், இத்தகைய செயலிகளை நம்பாமல், தங்களின் கடன்களை அடைக்க பாதுகாப்பான வழிகள் குறித்து வங்கி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

கடன் செயலிகள் மூலம் பெறப்படும் கடன் தொகைக்கு கந்துவட்டியை விட அதிகமான வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே, இத்தகையசெயலிகளுக்குப் பதில், பின்வரும் வழிகளை பின்பற்றலாம். இதன்படி,கடனை அடைக்க முதலில் தங்களது வீட்டில் அல்லது வங்கி லாக்கரில் உள்ள நகைகளை வைத்து கடன் பெற பரிசீலிக்கலாம். ஏனென்றால், இதற்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு.

இரண்டாவதாக தங்களது உறவினர்கள், நண்பர்கள் என தெரிந்தவர்களிடம் வட்டி இல்லாமலும் அல்லது குறைந்த வட்டிக்கும் கடன் கேட்டுப் பெறலாம். மூன்றாவதாக, வங்கிகளில் தனிநபர் கடன் பெறலாம். அடுத்ததாக, சொத்து ஆவணங்கள் இருந்தால், அவை வைத்துக் கடன் பெறலாம். மேலும், தேவையைப் பொறுத்து கிரெடிட் கார்டு கடனை கூட பரிசீலிக்கலாம்.

ஏனென்றால், சிலர் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கக் கூட இந்தக் கடன் செயலிகள் மூலம் கடன்பெற யோசிக்கலாம். அத்தகை தேவை ஏற்பட்டால், பல வங்கிகள் ஜீரோ பர்சன்டேஜ் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அத்தகைய கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம்.

கடன் பெற இத்தகைய வழிமுறைகளை பின்பற்றினால் சிக்கலில் சிக்கித் தவிக்கும் சூழ்நிலையில் இருந்து அனைவரும் தப்பிக் கலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x