Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM

ஒவ்வொருவர் வாழ்விலும் செழுமை ஏற்படட்டும்: ஆளுநர், முதல்வர், கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

சென்னை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர்மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: அறுவடைத் திருநாள் பொங்கல். இந்நன்னாளில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நமது பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், கலைகள், பண்டிகைகள் ஆகியவற்றை பாதுகாக்க உறுதியேற்போம். பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்விலும், உள்ளத்திலும் செழுமையை கொண்டுவர வாழ்த்துகிறேன்.

முதல்வர் பழனிசாமி: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனதுஇதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள். விவசாய தொழிலை மேம்படுத்திடவும், விவசாயிகளின் நல்வாழ்வுக்காகவும் அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இனிய தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும். உழவர்கள் மகிழட்டும். மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலவட்டும்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: உழவர்களின் நலனை பேணிக் காக்கவும், அவர்களின் வருமானத்தை பெருக்கவும் பல்வேறு சீரிய திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று கொண்டாடி மகிழ, அதிமுக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பையும் ரூ.2,500 ரொக்கத்தையும் வழங்கியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற நம்பிக்கைக்கு ஏற்ப அனைத்துத் தரப்பு மக்களின் மகிழ்ச்சிக்கான ஜனநாயக விடியலைத் தரும் உதயசூரியன் விரைவில் உதிக்கும். விவசாயிகளின் வாழ்வு செழித்திடும் வகையில், திமுக ஆட்சி அமைந்ததும் விவசாயக் கடன் - நகைக் கடன்தள்ளுபடி செய்யப்படும் என்ற உறுதியை வழங்குகிறேன். அதுபோலவே மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமையாக உள்ள கல்விக்கடனும் தள்ளுபடி செய்யப்படும். இவற்றுக்கான பொறுப்பை திமுக அரசு ஏற்கும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: விவசாயிகள் தங்கள் உரிமைக்காக டெல்லியில் கடுங்குளிரில் வீதிகளில் போராடுகிறார்கள். தை பிறந்தால் வழியும் பிறக்கும்நம்பிக்கையை விதையுங்கள். நல்லாட்சி மலர பொங்கல் திருநாள் வழிகாட்டும். பொங்கலிட்டு நீங்கள் வணங்கும் சூரியன், உங்கள் கண்ணீரை துடைக்கும் என்ற நம்பிக்கையோடு சொல்லுங்கள், ‘பொங்கலோ பொங்கல்’.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: உழவர்களின் துயரம் பற்றி ஒரு துளியும்கவலைப்படாத ‘விவசாயி மகன்’ அரசு, மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து வரும் மத்தியஅரசிடம் விசுவாசம் காட்டி வருகிறது. திசை எட்டும் நெருக்கடிகள்தீவிரமாகி, இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, தமிழர் வாழ்வில் இருள் நீக்கும் ஒளிச்சுடராக நம்பிக்கையளிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பொங்கல் திருநாளின்போது,வாசலில் போடப்படும் வண்ணக்கோலம் போல பன்முகத்தன்மைதான் இந்தியாவின் பெருஞ்சிறப்பு. பிறந்திருக்கும் தை தமிழகத்துக்கு ஒரு நல்ல வழியை திறக்கும் என்றநம்பிக்கையோடு அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இருள் விலகி தமிழகத்துக்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பொங்கல் பானை பொங்குவதைப் போன்று மக்களின் வாழ்வில் வளங்களும், நலன்களும் பொங்கட்டும்; கரும்பும், சர்க்கரைப் பொங்கலும் இனிப்பதைப் போன்று தமிழர்களின் வாழ்க்கை இனிக்கட்டும்; மஞ்சள் மற்றும் இஞ்சியின் மருத்துவ குணம்கிருமிகளை அழிப்பதைப் போன்றுநமது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து நெருக்கடிகளும் விலகட்டும். தமிழர்களின்வாழ்க்கையில் தைப்பொங்கல் திருநாளும், தமிழ்ப்புத்தாண்டும் புதிய ஒளியை ஏற்றட்டும்

விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைவர் திருமாவளவன்: வேளாண் திருவிழாவான பொங்கல்திருநாளைத் தமிழ்மக்கள் பூரிப்புடன் கொண்டாட, பெருமுதலாளிகளின் கோரப்பிடிக்குள் சிக்காமல்விவசாயத்தை மீட்டாக வேண்டும்.அதற்கு மத்திய அரசின் புதியவேளாண் சட்டங்களை நீக்க வேண்டும். டெல்லியில் விவசாயிகளின் அறப்போராட்டத்துக்கு ஆதரவாகப் போராட தமிழர்களும் பொங்கி எழுவோம் என பொங்கல் நாளில் உறுதியேற்போம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழகத்துக்கு நல்லதொரு விடிவு காலம் பிறந்து இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டெடுக்க பொங்கல் திருநாளில் வழி பிறக்கட்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்திட தமிழர்கள் வாழ்வு மேம்பட வளமானதமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்துவோம்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: துன்பமும், நோயும் உழவர்களுக்குத் தொல்லைகளும் மாறியபுத்தாண்டாக இத்தமிழ்ப் பொங்கல் விழா அமைந்து புதிய மாற்றங்களை - நம்பிக்கைகளைப் பொழிந்து, மகிழ்ச்சி பொங்கும் விழாவாக அமைய அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

மேலும், தமிழக வாழ்வுரிமைகட்சி நிறுவனர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் விஎம்எஸ்.முஸ்தபா, இந்தியதேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் ஜகிருத்தீன் அஹமது, பாமகஇளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அகில இந்தியமூவேந்தர் முன்னணி நிறுவனர்ந.சேதுராமன், மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் மு. தமிமுன்அன்சாரி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தி.தேவநாதன், காந்திய மக்கள் இயக்கம் மாநில செயல் தலைவர் டென்னிஸ் கோவில்பிள்ளை, திருச்சி எம்பி சு.திருநாவுக்கரசர், பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x