மருத்துவக் கல்விக்கு பொது நுழைவுத்தேர்வு கூடாது: வைகோ

மருத்துவக் கல்விக்கு பொது நுழைவுத்தேர்வு கூடாது: வைகோ
Updated on
2 min read

மருத்துவக் கல்விக்குப் பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தைக் கைவிட்டு, சமூக நீதிக் கொள்கையையும் பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பு ஏற்றதும், முக்கியமான கொள்கை முடிவுகளில், மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே, மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுக்கும்; மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

ஆனால் பா.ஜ.க. அரசின் செயற்பாடுகள் அனைத்தும் கூட்டு ஆட்சித் தத்துவத்திற்கு எதிராகவேதான் இருக்கின்றன.

அதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு, மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான திட்டம் ஆகும்.

இந்திய மருத்துவக் கழகம், மருத்துவப் படிப்புக்குப் பொது நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று அளித்துள்ள பரிந்துரையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, 2010 ஆம் ஆண்டு முதல் இந்திய மருத்துவக் கழகம், மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்குத் தீவிரமாக முயற்சித்தது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், மற்றும் மருத்துவ, பல் மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வினை நடத்திட இந்திய மருத்துவக் கழகம் அறிக்கை வெளியிட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டமாÞ கபீர் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை விசாரித்து, அகில இந்திய மருத்துவக் கழகத்தின் உத்தரவை இரத்து செய்தும், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தத் தேவையில்லை என்றும், ஜூலை 27, 2013 இல் தீர்ப்பு அளித்தது.

இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய மன்மோகன் சிங் அரசு முடிவு செய்தபோது, நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

தற்போது பா.ஜ.க. அரசும், மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வைப் புகுத்த முயற்சிப்பது ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, பழங்குடியின மற்றும் சிறுபான்மை மாணவர்களை பெரிதும் பாதிக்கும்.

சமூக நீதிக் கொள்கையில் இந்தியாவிற்கு வழிகாட்டுகின்ற தமிழ்நாட்டில், 69 விழுக்காடு இடஒதுக்கீடு கொள்கை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2015 ஆம் ஆண்டு, தமிழக அரசு பொது நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்துவிட்டு, தொழில் படிப்புகளுக்கு வெளிப்படையான தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மத்திய அரசு பொது நுழைவுத் தேர்வை திணித்தால், கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும், இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ்வரும் மாணவர்களும் மருத்துவப் படிப்புகளுக்குப் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும்.

அதோடு மட்டுமன்றி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறைக்கும் பாதகம் விளையும். எனவே மாநில அரசுகளின் உரிமைகளை மதித்து, மருத்துவப் படிப்புகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தைக் கைவிட்டு, சமூக நீதிக் கொள்கையையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in