Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM

பலத்தை காட்டி திமுகவிடம் அதிக தொகுதிகள் பெற திட்டம்: தமிழகம் முழுவதும் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

சென்னை

காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக கறார் காட்டுவதால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியை சுற்றுப்பயணம் செய்ய வைத்து பலத்தை காட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான தேதி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் ஒன்றரை மாதமே இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பல கட்சிகள் களத்தில் இருந்தாலும் அதிமுக, திமுக கூட்டணியே பிரதானமாக உள்ளன. அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதுகூட இன்னும் உறுதியாகவில்லை. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமைந்த திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அப்படியே உள்ளது.

10 கட்சிகளைக் கொண்ட இந்த கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து வெளிப்படையாக எந்த பேச்சும் இதுவரை நடக்கவில்லை. ஆனால், திரைமறைவில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைமை தொடர்ந்து பேசி வருவதாக கூட்டணி கட்சிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, இந்தத் தேர்தலை மிக முக்கியமானதாக பார்க்கிறது. தனித்து ஆட்சி அமைக்க வசதியாக குறைந்தது 180 தொகுதிகளில் போட்டியிட திமுக நினைக்கிறது.

ஆனால், கூட்டணியில் 10 கட்சிகள் இருப்பதால் அதை சாத்தியப்படுத்துவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. கடந்த 2016 தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறையும் அதே 41 தொகுதிகளை கேட்கிறது.

ஆனால், 41-ல் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றதால்தான் 2016-ல் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது.

அண்மையில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 19-ல் மட்டுமே வென்றது. இதனால்தான் அங்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியமைக்கும் வாய்ப்பு நழுவியது என்று காங்கிரஸ் மீது கூட்டணி கட்சிகளே வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகின்றன. இதை சுட்டிக்காட்டு்ம் திமுக, இந்த முறை 25 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்று கறார் காட்டுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஒருவரிடம் பேசியபோது, “இந்த முறை 25 தொகுதிகள் என்பதில் இதுவரை திமுக உறுதியாக உள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தருவோம் என்று கூறுகின்றனர். இறுதியாக 32 தொகுதிகள் வரை கிடைக்கலாம்" என்றார்.

கடந்த மக்களவைத் தேர்தலில்,தங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைமை அறிவித்தது. இதனால், திமுகவிடம் தொகுதிப் பங்கீட்டில் உறுதியுடன் பேச முடியாத நிலையில் காங்கிரஸ் தலைமை இருப்பதாக அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது, ‘‘திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. எந்தக் கட்சியாக இருந்தாலும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். காங்கிரஸுக்கான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்.

பிஹாரில் காங்கிரஸ் கூட்டணி இல்லாவிட்டால் லாலு பிரசாத் யாதவின் கட்சி 40 முதல் 45 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றிருக்கும். காங்கிரஸின் பலம் அனைவருக்கும் தெரியும்’’ என்றார்.

இந்த முறை 25 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் தமிழகத்தில் காங்கிரஸின் நிலைமை மேலும் மோசமாகிவிடும். அடுத்த தேர்தலில் இன்னும் குறைப்பார்கள். எனவே, காங்கிரஸின் பலத்தைக் காட்ட தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியை சுற்றுப்பயணம் செய்ய வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டத்துக்கு 'ராகுலின் தமிழ் வணக்கம்' என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக மதுரை அவனியாபுரத்தில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல் காந்தி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக கொங்குமண்டலத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் குறைந்தது 10 இடங்களில் ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டங்களை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் செய்து வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸின் இந்த திட்டத்தால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x