

கரோனா பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் இலவச தடுப்பூசி போடும் பணியில் கவனம் செலுத்த உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
முதல்வர் பழனிசாமியை முகாம் அலுவலகத்தில் `தி இந்து' குழும வெளியீடுகள் நிறுவனத் தலைவர் மாலினிபார்த்தசாரதி சந்தித்தார். அப்போது நடைபெற்ற கலந்துரையாடலின்போது முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
தமிழகத்தில் முதலில் கரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பின்னர், இலவச தடுப்பூசி போடும் பணியில் கவனம் செலுத்தப்படும். தடுப்பூசி போடும் பணியில் தனியார் மருத்துவமனைகளுக்கு பின்னர் வாய்ப்பு அளிக்கப்படும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில், சுகாதார கட்டமைப்பு பெரிய அளவில் உதவியுள்ளது. 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கியதுடன் 2,400 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன. 6 லட்சத்து 17 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதில் 3 கோடியே 26 லட்சம் பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். தினசரி 70 ஆயிரம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுவதுடன், இதுவரை 1 கோடியே 35லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று பரவல்மற்றும் இறப்பு படிப்படியாக குறைந்துள்ளது.
நோய் பாதிப்பில் இருந்து 7 லட்சத்து 93 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளதுடன், இறப்பு விகிதமும் 1.48 சதவீதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் இந்த செயல்பாட்டை பாராட்டிய பிரதமர்நரேந்திர மோடி, தமிழகத்தின் பெருந்தொற்று மேலாண்மையை அனைத்து மாநிலங்களும் பின்பற்றும்படி அறிவுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பின்பற்றி, பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். சென்னை மற்றும் கோவை பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகளவாக சென்னையில் 3 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, அவை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் வழக்குகளை எளிதாக கையாளவும் உதவுகிறது.
தொழில் முதலீடுகளை அதிகரிக்கஒற்றை சாளர திட்டம் மூலம் அனுமதியளித்தல் எளிதாக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் நான் ஆய்வுக்கூட்டம் நடத்தி,நிலுவையில் உள்ள பல்வேறு விண்ணப்பங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு தொழிலதிபரும் என்னை சந்திக்க அனுமதி பெற்று சந்தித்து தங்கள் குறைகளை தீர்த்துக்கொள்ளலாம்.
கரோனா காலத்திலும் விவசாய பணிகள் பாதிக்கப்படாததுடன், காவிரி டெல்டா பகுதியில் நெல்உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மேலும்,அத்தியாவசிய பொருட்களின் விலையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பேரவை தேர்தலுக்கு முன் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், மக்கள்தான் அம்மாவின் வாரிசு என்பதில்நான் தெளிவாக இருக்கிறேன். கடந்த நான்காண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகப் பணிகள் அவர்களை நல்ல நிலையில் வைத்துள்ளது என்பது உறுதி.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.