

பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் பழனிசாமிக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு, ஆண்டுதோறும் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடக்கும் குண்டம் திருவிழாவின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டமிறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்து வருகின்றனர்.
சுயம்பு வடிவில் உருவான பண்ணாரி மாரியம்மன் கோயிலில், 1964-ம் ஆண்டுவரை கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது. அதன்பின், பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது, கோயிலுக்கு 24 தூண்கள் கொண்ட கருங்கல் மண்டபமும், அதனைத் தொடர்ந்து, 22 அடி அகலத்துக்கு சுற்றுப்பிரகார மண்டபம், தங்கரதம் சுற்றி வர 22 அடி அகல மண்டபம் என கோயில் பிரகாரம் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டது. பண்ணாரி அம்மனுக்கு ரூ.53 லட்சம் செலவில் தங்கதேர் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அன்னதானத் திட்டத்துக்காக ரூ.45 லட்சம் செலவில் அன்னதான அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை பக்தர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த வாரம் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, புன்செய் புளியம்பட்டியில் நடந்த சமுதாயப் பெரியோர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, சம்மந்தம் நூற்பாலை அதிபர் கு.அருணாசலம், பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்கக் கோரி முதல்வர் பழனிசாமியிடம் மனு அளித்தார்.
இதுகுறித்து கு.அருணாசலம் கூறியதாவது இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் திருச்சி சமயபுரம், தஞ்சை புன்னைநல்லூர், சென்னை திருவேற்காடு, ஆனைமலை மாசாணியம்மன் கோயில்களில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொங்கு மண்டல பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியையும் லட்சக்கணக்கான பக்தர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றும் வகையில் ராஜகோபுரம் அமைக்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை மேற்கொள்வார் என நம்புகிறோம். இக்கோயிலில், ராஜகோபுரம் அமைப்பதற்கான போதிய இடமும் உள்ளது என்றார்.