

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிமான்டி காலனியில் பயன்பாடு இல்லாமல் பல வருடங்களாக சிதிலமடைந்த நிலையில் இருந்த வீடுகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
டிமான்டி காலனியில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக கிளம்பிய வதந்தியால் அப்பகுதி ஆள் அரவமற்ற பகுதியாக பலகாலமாக திகழ்ந்து வருகிறது. இந்த இடத்தை மைய கருவாக கொண்டு தமிழ்த் திரைப்படம் ஒன்று வெளியானது என்பது கவனிக்கத்தக்கது.
டிமான்டி காலனியில் முன்பு வசித்த மக்களும், ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் சிலரும் டிமான்டி காலனி சொத்தை கையாள்வதில் சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்பிவிடுவதாக கூறி வந்தனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடித்தனர்.
இது குறித்து 123-வது வார்டு ஜான்சி ராணி கூறும்போது, "இங்குள்ள கட்டிடங்கள் இப்போதைக்கு இடிக்கப்படுகின்றன. ஆனால், இங்கு வேறு கட்டிடம் கட்ட அனுமதியோ, இல்லை காலனியை மீண்டும் உருவாக்க அனுமதியோ யாரும் கோரவில்லை" என்றார்.
இதற்கிடையில் டிமான்டி காலனி சொத்தை நிர்வகித்துவரும் சென்னை-மயிலாப்பூர் ஆர்ச்டயசிஸ் நிர்வாகிகளோ, டிமான் டிகாலனியை மீண்டும் உருவாக்குவது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கத்தோலிக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தேவசகாயம் கூறும்போது, "186 கிரவுண்ட் நிலம் கொண்ட டிமான்டி காலனி, ஆதரவற்ற குழந்தைகள், விதவைப் பெண்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த சொத்தை கையாள்வதில் நிறைய குளறுபடிகள் நிலவி வருகின்றன. அவற்றிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்" என்றார்.