

காணும் பொங்கலை கொண்டாட, கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என காவல் துறை அறிவித்துள்ளது.
காணும் பொங்கலை கொண்டாட, கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவது வழக்கம். தற்போது வீரியமுள்ள கரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் ஒன்றாக கூடுவதை தடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து 15-ம்தேதி முதல் 17-ம் தேதி வரை கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
சாலை தடுப்புகள்
அரசின் உத்தரவை தொடர்ந்துதமிழகம் முழுவதும் கடற்கரைகளுக்கு செல்லும் சாலைகள் இன்று இரவு முதல் தடுப்புகள் வைத்து அடைக்கப்படும். அணைகள், நீர்நிலை சுற்றுலா தளங்களுக்கு செல்லும் வழிகளும் அடைக்கப்படும். எனவே, பொதுமக்கள் யாரும் காணும் பொங்கலை கொண்டாட கடற்கரைகள் மற்றும் நீர்நிலை பகுதிகளுக்கு வரவேண்டாம் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
அந்தந்த காவல் நிலையங்களில் விருப்பம் உள்ள காவலர்கள் பொங்கல் வைத்து கொண்டாடிக் கொள்ளலாம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.