

பொங்கல் பண்டிகைக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பூஜைப்பொருட்களை வாங்க சென்னையில் நேற்று மாலை பொதுமக்கள் சந்தைகளில் குவிந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் கோயம்பேட்டில் சிறப்பு சந்தை திறப்பது வழக்கம். ஒரு வாரம் நடைபெறும் சந்தையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து பண்டிகைக்கு தேவையான பூஜைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை மலிவான விலையில் வாங்கிச் செல்வார்கள். இந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொங்கல் சிறப்புச் சந்தை திறக்கப்படவில்லை. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூஜைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து, மாவிலை தோரணம், வாழைக் கன்று, பழ வகைகள்,பூக்கள் உள்ளிட்டவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில் அதிக அளவில் நேற்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.அதனால் பொதுமக்கள் அருகில்உள்ள சந்தைகளில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று குவிந்தனர்.
குறிப்பாக சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள சந்தை, பெரம்பூர், அரும்பாக்கம், தியாகராயநகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயபுரம், திருவொற்றியூர், அம்பத்தூர், அடையாறு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
இந்த சந்தைகளில் ஒரு கரும்பு ரூ.80 முதல் ரூ.120 வரை, மஞ்சள் செடிகள் ஒரு ஜோடி ரூ.40, வாழை இலை ஒன்று ரூ.5, சாமந்தி, கனகாம்பரம், கதம்ப பூ ஒரு முழம் தலா ரூ.30, மல்லி ரூ.60-க்கு விற்கப்பட்டது. பூசணிக்காய் கிலோ ரூ.30, ஒரு தேங்காய் ரூ.20 முதல் ரூ.40 வரை, வாழைப்பழம் ஒருசீப்பு ரூ.80, தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.20 என விற்கப்பட்டன
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருணைக் கிழங்கு, மொச்சைக்காய் ஒரு கிலோ தலா ரூ.60, துவரைக்காய் ரூ.60, என விற்கப்பட்டு வருகிறது. மேலும் ஆப்பிள் கிலோ ரூ.140, ஆரஞ்சு ரூ.60, மாதுளை ரூ.120, கொய்யா ரூ.80 என விற்கப்பட்டு வருகிறது.