

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போகி பண்டிகையையொட்டி நேற்று அதன் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் தேவையற்றவை என்பதை விளக்கும் வகையில், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் வேளாண் சட்ட நகல்களை பழைய தேவையற்ற பொருட்களுடன் சேர்த்து போகி தீயில் போட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சி மாவட்டத்தில் நத்தப்பேட்டை, கீழம்பி, கூரம், பாலுசெட்டி ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு தலைமையிலும், வேளியூர் பகுதியில் மாவட்டத் தலைவர் மோகன் தலைமையிலும், உத்திரமேரூர் அருகே வேடப்பாளையம் பகுதியில் மாவட்டப் பொருளர் பெருமாள் தலைமையிலும், விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கை மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மோகன் தலைமையில் பழையனூர் பகுதியிலும், கொளம்பாக்கம், ஜானகரிபுரம், செம்பாக்கம், மடையனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் துளசி நாராயணன் தலைமையிலும், தாமரைப்பாக்கத்தில் மாவட்டத் தலைவர் சம்பத் தலைமையிலும் விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.