சிக்கன் ரைஸுக்கு பணம் கொடுக்காமல் தகராறு: பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

சிக்கன் ரைஸுக்கு பணம் கொடுக்காமல் தகராறு: பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது
Updated on
1 min read

‘சிக்கன் ரைஸ்’ சாப்பிட்டபின் அதற்கு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி, முத்தையா தெருவைச் சேர்ந்தவர் சையது அபுபக்கர்(36). இவர் அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு கடந்த 11-ம் தேதி 3 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடை ஊழியர்களிடம் பிரியாணி கேட்டுள்ளனர். பிரியாணி காலியாகிவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். உடனே 3 பேரும் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அவர்களைச் சமாதானப்படுத்தி, ‘சிக்கன் ரைஸ்’ தயாரித்து கொடுத்துள்ளனர். அதைச் சாப்பிட்ட பின்னர், 3 பேரும் பணம் கொடுக்காமல் செல்ல முற்பட்டுள்ளனர்.

அவர்களிடம் ஓட்டல் ஊழியர்களும், அபுபக்கரும் பணம் கேட்டதற்கு, ‘‘பணம் தர முடியாது. நாங்கள் பாஜக.வைச் சேர்ந்தவர்கள். நாங்கள் அழைத்தால் ஆயிரம் பேர் வருவார்கள்’’ என மிரட்டியுள்ளார். மேலும், மத்திய அமைச்சர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, அவரதுபி.ஏவுக்கு போன் போட்டு தெரிவித்து விடுவேன் எனவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய போலீஸார், தகராறு செய்த 3 பேரையும் சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்தக் காட்சிகளைசெல்போனில் வீடியோ எடுத்த ஒருவர், அதை சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளார். இந்தகாட்சிகள் வைரலானது. இதையடுத்து ஐஸ்ஹவுஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக திருவல்லிக் கேணியைச் சேர்ந்த பாஸ்கர்(32), புருஷோத்தமன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பாஸ்கர், புருஷோத்தமன், திருவல்லிக்கேணி பகுதி பாஜக நிர்வாகிகள் என போலீஸார் தெரிவித்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in