அரசுத் துறைகளில் சட்டப்படியான நிர்வாகம் நடைபெறவில்லை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

அரசுத் துறைகளில் சட்டப்படியான நிர்வாகம் நடைபெறவில்லை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

அரசுத் துறைகளில் சட்டப்படியான நிர்வா கம் நடைபெறாமல், உயரதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்ற ஊழியர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

புதிய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுப் பணியாளர்களுக்கு எவ்வித பலன்களும் இல்லை. இதை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். 2011 தேர்தலின்போது, புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அளித்த வாக்குறுதியை முதல்வர் ஜெயலலிதா இதுவரை பரிசீலனை செய்யவில்லை.

பதவி உயர்வு காரணமாக 30 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோர், துப்புரவுப் பணியாளர்கள், கல்வி மற்றும் காவல் துறையில் உள்ள துப்புரவுப் பணியாளர்கள், பட்டு வளர்ச்சித் துறை தினக் கூலி பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுப் பணிகளுக்கு அவுட்சோர்சிங் மூலம் ஆட்கள் நியமிப்பதை தவிர்க்க வேண்டும். டாஸ்மாக் மற்றும் ரேஷன் பணியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுத் துறைகளில் சுமார் 2 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால், 4 பேர் செய்ய வேண்டிய வேலையை ஒரு பணியாளரே செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு, கடும் பணிச் சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

அரசுத் துறைகளில் சட்டப்படியான, நேர்மையான நிர்வாகம் குறைந்து கொண்டே வருகிறது. சட்டப்படி அரசுத் துறைகளின் நிர்வாகம் செயல்படாமல், மேல்மட்டத்திலிருந்து நிர்பந்தங்கள் அதிகரித்து வருவதால் அரசு ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது.

அரசுத் துறைகளில் நிலவும் கொடுமை யான சூழலை இந்த தற்கொலைகள் வெளிக்கொண்டு வந்துள்ளன. அரசுத் துறைகளில் சட்டப்படியான நிர்வாகம் நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர் 8-ம் தேதி சென்னை விருந்தினர் மாளிகை முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடை பெறும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in