

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக் கட்டு நடத்த அரசாணை பிறப்பிக் கப்பட்ட நிலையிலும், தொடர் மழை யால் திட்டமிட்டபடி நாளை(ஜன.16) நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்க லன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டில் ஜன.15-ம் தேதி (நாளை) ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசிடமிருந்து நேற்று முன்தினம் வரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் விநியோகமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், இதற்கான அனுமதியை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு ஜல்லிக்கட்டு விழாக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சூரியூர் ராஜா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி. யுமான ப.குமாரைச் சந்தித்து வலியு றுத்தினர். மேலும், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவிடமும் கோரிக்கை விடுத்தனர். அப்போது நிச்சயம் ஜன.13-க்குள்(நேற்று) இதற்கான அனுமதியைப் பெற்றுத் தருவோம் என அவர்கள் உறுதியளித்தனர்.
இந்த சூழலில் திருச்சி மாவட்டம் சூரியூர், புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து கோட்டாட்சியர் விஸ்வ நாதன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் சூரியூரில் ஜல்லிக் கட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்த னர். அப்போது தொடர் மழை காரணமாக அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக இருந்தது. இது தொடர்பாக ஜல்லிக்கட்டு விழாக் குழுவினருடன் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து ஜல்லிக்கட்டு ஒருங் கிணைப்பாளர் சூரியூர் ராஜா கூறும் போது, ‘‘ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத் தந்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுக்கும், அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமாருக்கும் கிராம மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கடும் போராட்டத்துக்கு இடையே அனுமதி கிடைத்துள்ள போதிலும், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் திட்டமிட்டபடி நாளை ஜல்லிக்கட்டு நடத்த முடியுமா எனத் தெரியவில்லை.
எனவே இதுகுறித்து ஆலோசிப் பதற்காக கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஜன.14-ல்(இன்று) நடைபெற உள்ளது. அதில் ஜல்லிக்கட்டை திட்டமிட்ட படி ஜன.15-ம் தேதி(நாளை) நடத்துவதா அல்லது வேறு தேதியில் நடத்துவதா என முடிவு செய்யப்படும்’’ என்றார்.