Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

தேசிய வாக்காளர் தின விநாடி - வினா போட்டி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் தொடர்பான விநாடி - வினா போட்டி நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை நடத்தப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்ட அறிக்கை:

தேர்தல் ஆணையம் சார்பில், 11-வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தேர்தல் தொடர்பான விநாடி- வினாபோட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டி பெருமளவு மக்களைச் சென்றடையும் வகையில் அனைத்திந்திய வானொலி நிலையம், சென்னை ரேடியோ மிர்சி மற்றும் பொதிகை தொலைக்காட்சி மூலமாகவும் நடத்தப்படும். நாளை (ஜன.15) முதல் 19-ம் தேதி வரை 5 நாட்கள் காலை 10 முதல் 10.30 வரை, மாலை 5 முதல் 5.30 மணி வரை, மாலை 7.30 மற்றும் 8.30 மணி ஆகிய நேரங்கள் தவிர பிற நேரங்களில் நடத்தப்படும். மேற்கண்ட போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 73050 60456 என்ற எண்ணுக்கு பதில்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்பி பங்கேற்கலாம். இந்த எண்ணுக்கு சரியான பதிலை முதலாவதாக குறுஞ்செய்தி அனுப்பும் நபர்அடுத்தடுத்த நாட்களில் தொடர்பு கொள்ளப்பட்டு பரிசு வழங்கப்படும்.

குறிப்பிட்ட கால அட்டவணைப்படி தனித்தனியாக ஒவ்வொரு ஊடகத்திலும் மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் ஒளி, ஒலிபரப்பு செய்யப்பட்டு 10 நிமிடங்களுக்குள் உரிய விடையை குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் நபர்கள் மட்டுமே போட்டியாளர்களாக கருதப்படுவர். ஒவ்வொரு ஊடகத்திலும் கேட்கப்பட்ட 10 வினாக்களில் அதிக பதில்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்பிய நபர்களுக்கு மாநில அளவிலான தேிய வாக்காளர் தின கொண்டாட்டத்தின்போது பரிசுகள் வழங்கப்படும்.

இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் சரியான பதிலைஅனுப்பினால் வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 25-ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான தேசியவாக்காளர் தின கொண்டாட்டத்தின்போது முதல், 2-ம், 3-ம் பரிசுகளாக முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

இவ்வாறு சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x