

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
ஏற்கெனவே சாரல் பொழிந்து வந்த நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவியது. இன்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. மீன்பிடித் தொழில், தென்னை சார்ந்த தொழில், ரப்பர் பால் வெட்டுதல், செங்கல் சூளை, கட்டிடத் தொழில், உப்பளம் என அனைத்துத் தரப்புத் தொழில்களும் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
அதிகபட்சமாக அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியான பாலமோரில் 64 மி.மீ., மழை பெய்திருந்தது. நாகர்கோவிலில் 42 மி.மீ., குளச்சலில் 24 மி.மீ., கொட்டாரத்தில் 20 மி.மீ., மயிலாடியில் 21 மி.மீ., மாம்பழத்துறையாறில் 32 மி.மீ., குருந்தன்கோட்டில் 39 மி.மீ., ஆனைகிடங்கில் 36 மி.மீ. மழை பெய்திருந்தது.
மலையோரங்களில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு உள்வரத்தாக 3,953 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது பேச்சிப்பாறை அணை 45.40 அடியாக உள்ளது.
கோதையாறு நீர்மின் நிலையம் அலகு இரண்டில் மழையால் அதிகமான தண்ணீர் வரத்து இருந்ததைத் தொடர்ந்து விநாடிக்கு 2,800 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இவையும் பேச்சிப்பாறை அணைக்கு வருகின்றன.
பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 2,113 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. நீர்மட்டம் 68.18 அடியாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.