

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாகத் தகவல் பரவியது. இதுபற்றி முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது, அதை மறுத்துவிட்டார்.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. ஆந்திரம் அருகேயுள்ள ஏனாம் பிராந்தியத்தின் எம்எல்ஏவான புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீண்டும் தனது சொந்தத் தொகுதியான ஏனாமில் போட்டியிடப் போவதில்லை என அண்மையில் அறிவித்தார். தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும், தான் மட்டுமல்ல, தன்னுடைய குடும்பத்தினர் யாரும் கூட வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தார். திருப்பதி தேவஸ்தான இயக்குநர் பதவிக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு வந்தார். அத்துடன் ஆந்திர ஆட்சியாளர்களுடன் மிக நெருக்கமாகவும் இருந்தார்.
மல்லாடி கிருஷ்ணாராவுக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் தொடர்ந்து மோதலும் நிலவி வந்தது.
இந்த நிலையில் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் நாராயணசாமியிடம் கடிதம் அளித்துள்ளதாக ஏனாம் பிராந்தியத்தில் தகவல் பரவியது. இதுபற்றி அவரது ஆதரவாளர்களிடம் கேட்டதற்கு, தங்கள் முன்னிலையில் இத்தகவலை அமைச்சர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டனர். மேலும் புதுச்சேரியில், அரசுத் தரப்பில் தரப்பட்ட வீட்டையும், காரையும் திருப்பி ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
சட்டப்பேரவையிலுள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தபோது, அவர் ஏனாம் பிராந்தியத்துக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர். அதே நேரத்தில் அரசு காரையும் இல்லத்தையும் நெடுங்காலமாக அவர் பயன்படுத்தவில்லை என்றும் சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றிக் கேட்க அமைச்சர் மல்லாடியைத் தொடர்பு கொண்டபோது அவர் தொடர்பில் வரவில்லை.
இதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த முதல்வர் நாராயணசாமியிடம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா கடிதம் தந்துள்ளாரா என்று விசாரித்தபோது, மறுப்பு தெரிவித்தார். அமைச்சர் ராஜினா கடிதம் தரவில்லை என்று முதல்வர் நாராயணசாமி பதில் அளித்தார்.