Published : 13 Jan 2021 05:34 PM
Last Updated : 13 Jan 2021 05:34 PM

காவிரி டெல்டா, அரியலூர் மாவட்டங்களில் திடீர் மழையால் பயிர் சேதம்; விவசாயிகளுக்கு இழப்பீடு தேவை: ராமதாஸ் வலியுறுத்தல் 

காவிரி டெல்டா, அரியலூர் மாவட்டங்களில் திடீர் மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் ஏற்பட்ட இழப்புகளைத் தாங்கிக்கொள்ளும் மனநிலையில் விவசாயிகள் இல்லை. இழப்புகள் ஈடு செய்யப்படாவிட்டால் அவர்கள் நடுத்தெருவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, தமிழக அரசு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

“காவிரி பாசனப் பகுதிகளிலும், கடலூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டதால், மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பொங்கல் திருநாள் கசப்பு மிகுந்ததாக மாறியிருக்கிறது.

காவிரிப் பாசன மாவட்டங்களிலும், அதையொட்டிய கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் பயிரிடப்படும் சம்பா நெற்பயிர் வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால், இப்போது பெய்து வரும் மழையால் இந்த மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள அனைத்து வகையான பயிர்களும் மிகக்கடுமையாக பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.

முதலில் நிவர் புயல், அடுத்து புரெவி புயல், அதைத் தொடர்ந்து டிசம்பர் இறுதியில் மழை, இப்போது ஜனவரி மத்தியில் மழை என ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து 4 கட்டங்களாகப் பெய்த மழைக்கு எந்தப் பயிரும் தப்பவில்லை. நிவர் மற்றும் புரெவி புயல்களால் பெய்த மழையில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான பயிர்கள் சேதமடைந்து விட்டன. அந்த இரு கட்ட மழையில் தப்பிய பயிர்கள் கடந்த டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரி தொடக்கத்தில் பெய்த மழையில் சிக்கி அழுகின.

மூன்றாவது கட்ட மழையிலும் தப்பிய பயிர்கள் இப்போது பெய்த நான்காம் கட்ட மழையில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளன. காவிரிப் பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவை முழுமையாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் ஆகும். அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் பயிரிடபட்டிருந்த நிலக்கடலை பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகிவிட்டன.

வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் பருவம் தவறிய மழையால் முற்றிலுமாகச் சேதம் அடைந்துவிட்டன. காவிரிப் பாசன மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளை விட நடப்பாண்டில் அதிக பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் இம்முறை விளைச்சலும் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், நல்ல லாபம் கிடைக்கும் என்று உழவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்தான், அடுத்தடுத்து பெய்த மழை பயிர்களை மட்டுமின்றி விவசாயிகளின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் அடியோடு சிதைத்துள்ளன.

அதிக விளைச்சலால் நல்ல லாபம் கிடைக்கும்; பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத வகையில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உழவர்களை கண்ணீர்க் கடலில் மூழ்க வைத்திருக்கிறது.

நெல் பயிரிட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வரையிலும், நிலக்கடலை பயிரிட்டிருந்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.60,000 வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சோளம், பருத்தி, வெங்காயம், உளுந்து, மலர்கள், தோட்டப் பயிர்கள் உள்ளிட்ட பயிர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக இப்போதைய மழையில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன.

நிவர் மற்றும் புரெவி புயல்களில் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு மட்டும் தமிழக அரசின் சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. கடைசி இரு கட்ட மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை.

காவிரிப் பாசன மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள உழவர்கள் அனைவரும் தங்கள் வீட்டுப் பெண்களின் நகைகளை அடகு வைத்தும், கூட்டுறவு சங்கங்களிலும், தனியாரிடமிருந்தும் அதிக அளவில் கடன் வாங்கித்தான் விவசாயம் செய்துள்ளனர். பயிர்கள் சேதமடைந்ததால் ஏற்பட்ட இழப்புகளைத் தாங்கிக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை.

இழப்புகள் ஈடு செய்யப்படாவிட்டால் அவர்கள் நடுத்தெருவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, இந்தச் சூழலை உணர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் போதிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x