தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் 65 ஆயிரம் கன அடி: நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது; கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் 65 ஆயிரம் கன அடி: நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது; கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணைக்கட்டை தாண்டி தாமிரபரணி ஆற்றில் இன்று 65 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும், தாமிரபரணி ஆற்றின் இரு கரையோர பகுதிகளிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியதாலும் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழையும் பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணைக்கட்டை தாண்டி இன்று பிற்பகலில் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதுவே ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி 62 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது. இதனால் கரையோர பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயக்குறிச்சி பகுதியில் தாழ்வான பகுதியில் ஆற்றுநீர் புகுந்த இடங்களில் வசித்த 10 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதுபோல ஆழ்வார்திருநகரியில் 35 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆழ்வார்திருநகரி முஸ்லீம் தெரு பகுதியில் ஆற்றுநீர் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரங்களில் உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. குறிப்பாக முறப்பநாடு, வல்லநாடு, முத்தாலங்குறிச்சி, ஆழ்வார்திருநகரி, கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் நெல் மற்றும் வாழைப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும், கரையோர பகுதிகளில் உள்ள சில சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தாமிரபரணி கரையோர பகுதிகளை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை மழை சற்று ஓய்ந்து காணப்பட்டது. இந்நிலையில் பகல் 1 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை மாலை 4 மணி வரை நீடித்தது.

இதனால் தூத்துக்குடி நகரின் பல பகுதிகள் மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தடைப்பட்டுள்ளன. தொடர் மழையால் சாலைகள், தெருக்கள், சந்தைகளில் தண்ணீர் தேங்கியதால் பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 17, காயல்பட்டினம் 12, குலசேகரன்பட்டினம் 16, விளாத்திகுளம் 19, காடல்குடி 12, வைப்பார் 26, சூரன்குடி 28, கோவில்பட்டி 12, கழுகுமலை 2.5, கயத்தாறு 20, கடம்பூர் 31, ஓட்டப்பிடாரம் 3, மணியாச்சி 19, வேடநத்தம் 30, கீழஅரசடி 13, எட்டயபுரம் 14, சாத்தான்குளம் 52.2, ஸ்ரீவைகுண்டம் 28.3, தூத்துக்குடி 8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in