

அரசுப் பணத்தை வாரிவழங்கி மூழ்கிக்கொண்டிருக்கும் அதிமுக எனும் கப்பலை தூக்கி நிறுத்திவிடலாம் என்று கனவு கண்டால் அதுபலிக்காது. மக்கள் இதற்கெல்லாம் ஏமாறமாட்டார்கள். அதிமுக, பா.ஜ., கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வருவாய் இன்றி தவித்தபோது மக்களுக்கு ரூ.5000 வரை வழங்ககோரினோம்.
மக்கள் துயரத்தில் இருந்தபோது நிவாரணம் வழங்காமல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு பொங்கல்பரிசு என்ற பெயரில் ரூ.2500 வழங்குகின்றனர்.
தேர்தலை மனதில் வைத்து தான் இந்த தொகை வழங்கப்பட்டது என அனைவருக்கும் தெரியும். இதைக்கொண்டு தேர்தல் ஆதாயம் பெறலாம் என நினைக்கின்றனர்.
இப்படியெல்லாம் அரசுப் பணத்தை வாரிவழங்கி மூழ்கிக்கொண்டிருக்கும் அதிமுக எனும் கப்பலை தூக்கிநிறுத்திவிடலாம் என்று கனவு கண்டால் அதுபலிக்காது. மக்கள் இதற்கெல்லாம் ஏமாறமாட்டார்கள், விவரமானவர்கள். அதிமுக, பா.ஜ., கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது.
பாஜக நேற்று ஒன்று, நாளை ஒன்று மாற்றிமாற்றி பேசுகின்றனர். பா.ம.க., அந்த கூட்டணியில் தான் உள்ளதாக என இன்னும் அவர்கள் தெளிவுபடுத்தவில்லை.
தேமுதிக பொதுக்குழு தான் முடிவு செய்யும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். எனவே அதிமுக, பா.ஜ., கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பம் இல்லை. விவசாயிகள் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் தலையிட்டு இரண்டு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சனையை உச்ச நீதிமன்றம் இரண்டு மாதங்கள் நீடிக்க விரும்புகிறதா. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மத்திய அரசுக்கு தவணை வாங்கித்தருவதாக உள்ளது. பொதுமக்கள் தொடர்பான பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதை ஏற்கமுடியாது.
இப்படித்தான் அரசு ஊழியர் போராட்டம், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் தலையிட்டது. மக்கள் அடிப்படை உரிமைகளை உச்சநீதிமன்றம் தட்டிப்பறிப்பது போல் உள்ளது. விசாயிகளுக்கும் அரசாங்கத்திற்குமான பிரச்சனையை அவர்கள்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும்.
போராடும் விவசாயிகளோடு இணைந்து பொங்கல் கொண்டாட உள்ளோம். மழையால் கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் அரசு வழங்கவேண்டும். நிவாரணம் வழங்காவிட்டால் விவசாயிகளை திரட்டி பொங்கலுக்கு பிறகு போராட்டம் நடத்தப்படும்.
துணைவேந்தர் நியமனத்தில் ஆளுனர், அரசை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுவது போட்டி அரசாங்கம் நடத்துவது போல் உள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவினர் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றே தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் தான் பாலியல் கொடுமைகள் நடந்துள்ளது.
இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும், என்றார். பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.