

தமிழ் மக்களுக்கும், பண்பாட்டு, கலாச்சாரத்திற்கு எதிராக பாஜக செயல்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த முட்டுக்கட்டை போட்டதை மூடி மறைத்துவிட்டு காங்கிரஸ் மீது பழிபோடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. உண்மையை எவராலும் மறைக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழர் திருநாளாம் தைத் திருநாளில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நேரில் காண, தலைவர் ராகுல்காந்தி நாளை அவனியாபுரம் வருகை புரிகிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி தமிழக மக்களிடையே வரலாறு காணாத வரவேற்பையும், உற்சாகத்தையும் பெற்றிருக்கிறது.
தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை போற்றுகிற வகையில் அவரது வருகை அமைந்திருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கலாச்சாரத்தையும், பெரிதும் மதிக்கிற பாரம்பரியத்தில் வந்த தலைவர் ராகுல்காந்தி, தமிழர்களின் வீர விளையாட்டை நேரில் கண்டு மகிழ்வதற்காகவே வருகை புரிகிறார்.
ஆனால், தலைவர் ராகுல்காந்தி ஜல்லிக்கட்டு நிகழ்வில் பங்கேற்பதைச் சகித்துக் கொள்ளாத பாஜக உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள், ஊடகங்களின் மூலமாக அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றன. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குத் தடை விதித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அதில் பங்கேற்க என்ன உரிமை இருக்கிறது ? என்ற அர்த்தமற்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றனர்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் எந்த தடையும் இல்லாமல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதை எவராவது மறுக்க முடியுமா ? மதுரை நீதிமன்றத்தால் 2006-ல் விதிக்கப்பட்ட தடையை மேல்முறையீடு செய்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதேபோல, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 2009 இல் நிறைவேற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற அன்றைய திமுக ஆட்சியில் சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கையும், உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, வென்று மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் ஆதரவோடு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதை எவரும் மறுத்திட இயலாது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 11.7.2011 ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை தடையாக இருந்ததாகக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற செயலாகும்.
அந்த அறிவிக்கைக்குப் பிறகு 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மதுரை உயர்நீதிமன்ற ஆணையின் பேரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததை பாஜகவினர் மூடி மறைத்துப் பேசுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் 2015, 2016 ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்குப் பதில் கூறாத பாஜக, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
கடந்த 2014-ல் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடையாணை விதித்த பிறகு, அதை நீக்குவதற்கு மத்திய பாஜக அரசு உருப்படியான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினாலேயே தொடர்ந்து மூன்றாண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாத அவலநிலை ஏற்பட்டது.
1960-ல் கொண்டு வரப்பட்ட மிருகவதைத் தடுப்பு சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்குத் தடை வழங்கியதை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். இதைக் கருத்தில் கொண்டு இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தால் மட்டுமே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொண்டு 2015, 2016 இல் ஜல்லிக்கட்டு நடத்தியிருக்க முடியும்.
அதற்கு மாறாக, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சாதாரண துறை சார்ந்த அறிவிக்கையின் மூலம் எதிர்கொண்டதால் அதை உச்ச நீதிமன்றம் தடை செய்து விட்டது. இது தமிழக பாஜகவை திருப்திப்படுத்துவதற்காகவே, அத்தகைய கபட நாடகத்தை அன்று மத்திய பாஜக அரசு அரங்கேற்றியது.
உச்ச நீதிமன்றம் தடை விதித்து 32 மாதங்கள் ஆனபிறகும், அதைச் செயலிழக்கச் செய்ய மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென அன்றைய மத்திய பாஜக அரசு மனப்பூர்வமாக நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தில் மிருகமாவதைத் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்க முடியும். இல்லையெனில் எதற்கெடுத்தாலும் அவசரச் சட்டம் இயற்றுகிற பாஜக அரசு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கலாம்.
இதை அன்றைய பாஜக அரசு ஏன் செய்யவில்லை என்பதற்குக் காங்கிரஸ் கட்சியை இன்று விமர்சனம் செய்கிறவர்கள் பதில் கூற முடியுமா? இத்தகைய அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அன்று நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களைப் பெற்றிருந்த அதிமுக, எந்த அழுத்தத்தையும் கொடுக்காதது ஏன் ? இந்த போக்கை எதிர்த்துத் தான் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக 2017 ஜனவரி 8 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 15 நாட்கள் சென்னை மெரினா கடற்பரப்பில் இரவு-பகலாக 20 லட்சம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.
இதற்கு பிறகும் மத்திய பாஜக அரசு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அவசரச் சட்டம் கொண்டு வர மறுத்துவிட்டது. மெரினா புரட்சியை எதிர்கொள்ள முடியாத அதிமுக அரசு இறுதியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது. இதற்காக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் விளைவாகவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துகிற உரிமையை தமிழ் மக்கள் பெற்றார்கள் என்கிற வரலாற்றை எவரும் மறைத்து விட முடியாது.
எனவே, தமிழ் மக்களுக்கும், பண்பாட்டு, கலாச்சாரத்திற்கு எதிராக பாஜக செயல்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த முட்டுக்கட்டை போட்டதை மூடி மறைத்துவிட்டு காங்கிரஸ் மீது பழிபோடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. உண்மையை எவராலும் மறைக்க முடியாது. தமிழர்களின் வீர விளையாட்டை நேரில் காண வருகை புரிகிற தலைவர் ராகுல்காந்தியை வரவேற்க நாளை மதுரை விமான நிலையத்தில் பெருந்திரளாக அணி திரள்வோம்.
தமிழர்களின் பண்பாட்டைப் போற்றுகிற வகையில் அவரது பயணம் அமைந்திருப்பதைப் பெருமைப்படுத்துகிற வகையில் அணி, அணியாக திரண்டு வரும்படி காங்கிரஸ் நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.