

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 50 ஆயிரம் கனஅடிக்குமேல் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால் கரையோரத்தில் தாழ்வான குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
திருநெல்வேலியில் வெள்ளம் சூழ்ந்த 150 வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரதான அணையான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் கடந்த சில நாட்களுக்குமுன் நிரம்பியதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்ககளாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு பெருமளவுக்கு நீர்வரத்து இருந்தது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து நேற்று முன்தினம் இரவில் 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்துவிடப்பட்டிருந்தது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
திருநெல்வேலியில் தாமிரபரணி கரையோரத்தில் கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணார்பேட்டை ஆகிய பகுதிகளில் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. வண்ணார்பேட்டையில் எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்பு தொண்டர் தெரு, இசக்கியம்மன்கோயில் தெரு ஆகிய இடங்களில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து தீயணைப்புத்துறை வீரர்களும், வருவாய்த்துறையினரும் அங்கிருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். ரப்பர் படகுகள் மூலம் கால்நடைகளும் மீட்கப்பட்டன.
மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் இதுவரை 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் தாமிரபரணி கரையோரத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சில உறைகிணறுகளும் சேதமடைந்துள்ளன. சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர், வைராவிகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் தாமிரபரணி கரையோரத்தில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களிலும் வெள்ளம் புகுந்ததால் பயிர்கள் மூழ்கியுள்ளன.
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து வெள்ளநிலவரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையிலிருந்து 15700 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 15446 கனஅடி, கடனா அணையிலிருந்து 1212 கனஅடி தண்ணீர் என்று மொத்தம் 32358 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் நேற்று காலை 9 மணியளவில் திறந்துவிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவில் 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரையில் திறந்துவிடப்பட்டிருந்தது. மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டபடி விஜயநாராயணம் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளத்திலிருந்து 35 கடற்படை வீரர்கள் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 50 பேர் 2 குழுக்களாக திருநெல்வேலி மற்றும் விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழையால் பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. திருப்புடைமருதூர், வைராவிகுளம், சேரன்மகாதேவி பகுதிகளில் பயிர் சேதம் குறித்து வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை இணைந்து கணக்கெடுப்பு நடத்துவார்கள். தண்ணீர் வடிந்தபின்னரே சேதம் குறித்து முழு அளவில் தெரியவரும். திருநெல்வேலியில் கூட்டுகுடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய பயன்படும் சில உறைகிணறுகள் தண்ணீரில் மூழ்கியிருக்கின்றன. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்காமல் இருக்க பல்வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 227 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி கரையோரத்தில் 87 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அரசுத்துறைகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் முழு தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.