Published : 13 Jan 2021 02:43 PM
Last Updated : 13 Jan 2021 02:43 PM

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழில்துறைக்கான 7 உறுதிமொழிகள்: கமல்ஹாசன் வெளியிட்டார்

சென்னை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழில் துறைக்கான 7 உறுதி மொழிகளை அதன் நிறுவனர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

பொள்ளாச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதிமய்யம் தலைவர் தொழில்துறைக்கான 7 உறுதிமொழிகளை வெளியிட்டார்.

1. புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக் கூறுகளுக்கான துறை:

அறிவியல், தொழில்நுட்பங்கள், புதிய தொழில் முனைதல் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து அவற்றை நடைமுறைச் சாத்தியமாக்கிடவும் தொழில்துறை புரட்சி 4.0 க்கு வித்திடுவதற்கு ஏதுவாக புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக் கூறுகளுக்கான துறை எங்கள் அரசால் நிறுவப்படும்.

2.தொழில்துறையுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை:

முதல்வர் தலைமையில் அரசு, "மதியுரைக்குழு" ஒன்றினை நிறுவி, அரசாங்கம்-தொழில்-கல்வி- அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு காலாண்டிலும் "கலந்தாலோசனைக் கூட்டம் “ நடத்துவதற்கான முன்னெடுப்புகளைச் செய்யும் எங்கள் அரசு.

3. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) வலுப்படுத்துதல் :

நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க முயற்சிகள் மூலமாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பணப்புழக்கத்தை எங்கள் அரசு உறுதி செய்யும்.

4. குறைந்த வளர்ச்சியுள்ள பகுதிகளின் மேம்பாடு :

பெரிய தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகள் மற்றும் கிளை அலுவலகங்களை, வளர்ச்சி குறைந்த பகுதிகளில் அமைத்திட ஊக்குவிக்கப்படும். அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி நகர்ப்புறம் நோக்கிய நகர்வுகள் கட்டுப்படுத்தப்படும்.

5. அமைப்புசாரா தொழிலாளர் வலுப்படுத்துதல்:

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு (புலம்பெயர் தொழிலாளர்கள்) துறையில் கட்டாய மற்றும் விரிவான காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் வேலை

பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருவதன் மூலம் அவர்களும் அமைப்புசார் தொழிலாளர்களாக முறைப்படுத்தப்படுவர்.

6. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் திறன் மேம்பாட்டு மய்யங்கள் நிறுவப்படும்:

ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்திலும் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து புதிய திறன் மேம்பாட்டு மய்யங்கள் நிறுவப்படும்.

7. வளர்ச்சிக்கான தொழில்துறை முதலீட்டுத் திட்டம்:

புதிய தொழில் துறை முதலீடுகள் செய்ய முற்படும் பொழுது, முன்மொழிவு செய்வது முதல் அதை செயல்படுத்தும் வரை, முறையான காலக்கெடுவுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்துவோம். அதன் மூலம் முதலீடு செய்யும் வணிக நிறுவனங்களின் தொழில் மேம்பாடடைய வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x