

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங் கரையோரத்தில் உள்ள தாழ்வானப் பகுதிகளில் நேற்றிரவு வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை நீடித்துவரும் நிலையில் தாமிரபரணியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்குக் காணப்பட்டது.
தாமிரபரணி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளநீர் பாய்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நேற்றிரவு (செவ்வாய் இரவு) தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகமான அளவு ஏற்பட்டது.
வண்ணாரப்பேட்டை, குறுக்குத்துரை உள்ளிட்ட தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீட்புப் பணியில் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவின் இரண்டு பிரிவுகள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 25 வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் தீயணைப்புப் படையினரும் கைகோத்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ள அபாயப் பகுதிகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர் நேற்றிரவு தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், தாமிரபரணி கரையோரத்தை ஒட்டி 87 தாழ்வானப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆலடியூர் என்ற இடத்தில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த முகாமில் 8 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மின்சாரம் துண்டிப்பு:
வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை ஜங்ன்ஷன், மீனாட்சிபுரம், வண்ணாரப்பேட்டை சாலை தெரு எட்டுத்தொகை தெரு, டவுன் கருப்பந்துறை ,சி.என்.வில்லேஜ், நாரணம்மாள்புரம் .ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (13-01-2021) காலை 8 மணி நிலவரப்படி:
பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி நீர் இருப்பு : 142.5 அடி நீர் வரத்து : 15977.06 கனஅடி வெளியேற்றம் : 14731.45 கன அடி
சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி நீர் இருப்பு : 148.55 நீர்வரத்து : Nil வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118 நீர் இருப்பு : 117.18 அடி நீர் வரத்து : 12574 கனஅடி வெளியேற்றம் : 12117கன அடி
வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 49 அடி நீர் இருப்பு: 40 அடி நீர் வரத்து: 1039.91 வெளியேற்றம்: NIL
நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி நீர் இருப்பு: 11.32 அடி நீர்வரத்து: 19.90 கன அடி வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி நீர் இருப்பு: 36. 25 அடி நீர்வரத்து: 156 கன அடி வெளியேற்றம்: 60 கன அடி
மழை அளவு:
பாபநாசம்: 185 மி.மீ
சேர்வலாறு: 110 மி.மீ
மணிமுத்தாறு: 165 மி.மீ
நம்பியாறு: 45 மி.மீ
கொடுமுடியாறு: 30 மி.மீ
அம்பாசமுத்திரம்: 97 மி.மீ
சேரன்மகாதேவி: 65.40 மி.மீ
நாங்குநேரி: 32 மி.மீ
ராதாபுரம்: 28 மி.மீ
பாளையங்கோட்டை: 26 மி.மீ
நெல்லை :23 மி.மீ
குற்றாலத்தில் குளிக்கத் தடை:
நெல்லையைப் போல் தென்காசி மாவட்டத்திலும் இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.