

உலக நாடக தினத்தை முன்னிட்டு புராணம், இதிகாசம் உள்ளிட்ட 9வகையான நாடகங்களை வல்லுநர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அளிக்கலாம் என இயல் இசை நாடக மன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் உத்தரவுப்படி உலக நாடக தினம், ஆண்டுதோறும் மார்ச் 27-ம்தேதி தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் புராண, இதிகாச, தமிழ்க் காப்பியங்கள், இலக்கியம், வரலாறு, சமூக, நாட்டுப்புற, மவுன மற்றும் இசை நாடகங்கள் போன்ற 9 வகையான புதிய நாடகங்களை மேடையேற்றம்செய்ய, வல்லுநர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த 9 துறைகளில் இருந்தும் புதிய நாடகங்கள், புதிய கருத்துருக்களை கண்டறிந்து அவற்றை நாடக வடிவில் எழுதி, கட்டமைத்து துறைக்கு ஒரு நாடகம் என்று மேடையேற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கருத்துருக்கள் புதியவையாகவும் அவை கண்டறியப்பட்ட மூல நூல்களில் இருந்து வேறுபடாதவாறும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாடகமும் 2 மணிநேரத்துக்குள் முடியும் வகையில் அமைய வேண்டும். நாடகம் மேடையேற்றம் செய்யப்பட உள்ள புதியநாடகங்கள் அரசையோ அல்லது அரசின் திட்டங்களையோ விமர்சனம் செய்யாத வகையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட கருத்துகளை உள்ளடக்கியதாகவும் அமைய வேண்டும். நாடகம் மேடையேற்றம் செய்வதற்கான அமைப்புச் செலவினம் மன்றத்தால் ஏற்கப்படும். நாடக ஆசிரியர் மற்றும் நாடகக்குழுவுக்கு மன்றத்தால் நிர்ணயிக்கப்படும் மதிப்பூதியமும் வழங்கப்படும்.
மேலே கூறியுள்ள திட்டங்களின்கீழ், பங்குபெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்துடன் நாடகத்தின் தலைப்பு மற்றும் நாடகத்தின் 3 முழுப்பிரதிகள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள், ‘உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பிஎஸ்.குமாரசாமிராஜா சாலை, சென்னை 600 028’என்ற முகவரிக்கு பிப்.5-ம் தேதிமாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 – 2493 7471 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.