

திருச்சி, மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 7 இடங்களில் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கிவிட்ட நிலையில், மற்ற 25 மாவட்டங்களிலும் 3 மாதங்களுக்குள் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), சமரச மையம் போன்றவை குறித்து மக் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டம்தோறும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டப்பிரிவு 22 (பி)-ல் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. மாவட்டங்களில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் அமைக்க இந்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது. இதன்படி, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்காக ரூ.7.70 கோடி அனுமதித்தது.
திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருச்சி, சேலம், ஈரோடு, மதுரை ஆகிய 7 இடங்களில் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு, மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து செயல்பட்டு வருகின்றன. இங்கு காப்பீடு, வங்கி, உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் போன்ற பொது பயன்பாட்டு சேவைகள் குறித்த வழக்குகள் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. இத்தீர்ப்பின் மீது மேல்முறையீடு கிடையாது.
இதன்மூலம் வழக்காடிகளுக்கு பயணச் செலவு, அலைச்சல், கால விரயம் தவிர்க்கப்படும். எனவே, எல்லா மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் விரைவில் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்எம்டி டீக்கா ராமன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
துறைரீதியான தேர்வு
மாவட்ட நீதிபதிகள் இருந்த 7 மாவட்டங்களில் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு செயல்படவும் தொடங்கிவிட்டன. மற்ற 25 மாவட்டங்களில் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் செயல்படுவதற்கு மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வேண்டும். அதற்கு சார்பு நீதிபதிகள், பதவி உயர்வு மூலம் மாவட்ட நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். இதற்காக உயர் நீதிமன்றம் துறைரீதியான தேர்வு நடத்தி, நேர்காணல் நடத்த உள்ளது. இப்பணிகள் முடிவடைய 3 மாதங்கள் வரை ஆகும். அதன்பிறகு 25 மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கும்.
இவற்றில் தற்போது விசா ரிக்கப்படும் வழக்குகள் மட்டு மல்லாமல் பாகப்பிரிவினை, அடமானம், காசோலை தொடர் பான வழக்குகள், விவாகரத்து வழக்குகள், இரு மனைவிகளின் வாரிசு உரிமை போன்ற வழக்கு களையும் விசாரிக்க அனுமதிக்கு மாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யிடம் கோரப்பட்டுள்ளது. இதற் கான அனுமதி விரைவில் கிடைத்துவிடும். அதன்பிறகு, மாவட்ட அளவிலான பெரும் பாலான வழக்குகள், மக்கள் நீதிமன்றத்திலேயே தீர்க்கப்படும். நிரந்தர மக்கள் நீதிமன்றங்களின் முழுப் பலன்கள் அடுத்த 6 மாதங்களில் தெரியவரும்.
இவ்வாறு ஆர்எம்டி டீக்கா ராமன் கூறினார்.