Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 07:56 AM
தமிழகத்துக்கு முதல்கட்டமாக 5 லட்சத்து 36,500 டோஸ் கோவிஷீல்டு கரோனா தொற்று தடுப்பூசி மருந்து விமானம் மூலம் சென்னை வந்தது. தடுப்பு மருந்துகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.
இந்தியா முழுவதும் கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்துதமிழகத்துக்கு முதல்கட்டமாக 5 லட்சத்து 36,500 டோஸ் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் நேற்று சென்னைக்கு வந்தன. தேனாம்பேட்டை டிஎம்எஸ்வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மருந்துகளை சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இணை இயக்குநர் சிவஞானம், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முதல் கட்டமாக 5 லட்சத்து 36,500டோஸ் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து 45 பெட்டிகளில் வந்துள்ளது. மேலும் 20 ஆயிரம் ‘கோவேக்ஸின்’ தடுப்பு மருந்து வரவுள்ளது. இவை மாநில கிடங்கில் இருந்து 10 மண்டல கிடங்குகளுக்கு அனுப்பப்படும். அதன்பின்னர் அனைத்து மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்குகளுக்கும் பிரித்து வழங்கப்படும். அங்கிருந்து தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பப்படும்.
2,700 சேமிப்பு மையங்கள்
சென்னையில் உள்ள மாநில குளிர்பதன நிலையத்தில் 1.5 கோடி தடுப்பு மருந்துகளும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் 51 குளிர்பதன கிடங்குகளில் 2.5 கோடிக்கும் அதிகமான மருந்துகளையும் சேமிக்க முடியும். மேலும் 2,700-க்கும் மேற்பட்ட சேமிப்பு மையங்கள் உள்ளன. சுகாதார மாவட்டங்களுக்கு மருந்துகளை கொண்டு செல்ல 45 வாகனங்கள் தயாராக உள்ளன.
ஏற்கெனவே, தடுப்பு மருந்துகள் செலுத்துவதற்கான 25 லட்சம் ஊசிகள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. முதலில்விருப்பம் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும். இதுவரை 4 லட்சத்து 39,500 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசிபோட்டுக் கொள்ள முன்பதிவுசெய்துள்ளனர். ஏற்கெனவே ஒத்திகை நடத்தப்பட்டதால், அதைசெலுத்துவதில் எந்த நடைமுறைசிக்கல்களும் இல்லை. தொலைதூர கிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் முகாம்களை நடத்த முடியும்.
‘கோ-வின்’ செயலியில் தடுப்பு மருந்து செலுத்துபவரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஊசி போடப்பட்ட பயனாளியின் செல்போன் எண்ணுக்குஎஸ்எம்எஸ் வரும். 28 நாட்களுக்கு பின்னர் 2-ம் முறை தடுப்பூசி செலுத்தவேண்டும். தடுப்பூசி வந்தாலும், கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை வந்துள்ள மருந்துகளில் 5.12 லட்சம் டோஸ் மருந்து, 10 சுகாதார மண்டல சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு, சுகாதாரமாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. 24,300 டோஸ் மருந்து, மாநில மருந்து சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!