

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உட்புற சாலைகள் பழுதடைந்துள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் உள், வெளி நோயாளிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலை, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை ஆகியவற்றில் ஏற்படும்விபத்துகளில் காயம் அடைபவர்களும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உட்புற சாலைகள் அனைத்தும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. விபத்துமற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலைகள் பழுதடைந்துள்ளதால் நோயாளிகள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள எழும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு மற்றும்மற்ற பிரிவுகளுக்கு அடிப்பட்டவர்களை ஸ்ட்ரெச்சரில் வைத்து பழுதடைந்த சாலையில் கொண்டு செல்லும் நிலை உள்ளது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் நோயாளிகள் வலி ஏற்பட்டு மரண வேதனையை அனுபவிக்கும் நிலை உள்ளது.
எனவே, அதிகாரிகள் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் எனசமூக ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.
இதுகுறித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன் கூறும்போது, "பல ஆண்டுகளாக வே மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படாமல் உள்ளன.
நோயாளிகளை சக்கர படுக்கையில் வைத்து இந்த சாலைகளில் இழுத்துச் செல்லும்போது, ஏற்கெனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, உடனடியாக மருத்துவமனை உட்புற சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.