கரோனா பரவும் ஆபத்து இருப்பதால் பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கரோனா பரவும் ஆபத்து இருப்பதால் பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

கரோனா தொற்று இருப்பதால் பள்ளிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றாலும்கூட, நோய்த்தடுப்பு கோணத்தில் இம்முடிவு சரியானதல்ல. அவசர கோலத்தில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

கரோனா பரவல் இன்னும் முற்றிலுமாக ஓயவில்லை. சிறிய வாய்ப்பு கிடைத்தாலும்கூட கரோனா முன்பைவிட வேகமாக பரவும் ஆபத்து உள்ளது. பள்ளிகளை திறக்கும் விஷயத்தில் இது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இங்கிலாந்தில் இருந்து உருமாறிய கரோனா கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அது அவர்கள் மூலமாக வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் பரவக்கூடும். இதேநிலை தொடர்ந்தால் அடுத்த சிலவாரங்களில் தமிழகத்தில் கரோனாபரவல் கட்டுப்படுத்த முடியாதநிலைக்கு சென்று விடும். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருப்பதாலும், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுவதாலும் பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் காட்டத் தேவையில்லை.

கல்வியைவிட குழந்தைகளின் உயிர் மிகவும் முக்கியமானதாகும். கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், நிலைமை ஓரளவு சீரடைந்த பின்னர் பள்ளிகளைத் திறப்பதுதான் சரியானதாக இருக்கும். எனவே, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in