

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா மனு அளித்ததை அடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழு அமைக்கும் பணிகள் துரிதமடைந்துள்ளன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 3-ம் தேதி டெல்லி வந்திருந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக கோரிக்கைகள் அடங்கிய 65 பக்க மனு ஒன்றை அளித்தார். அதில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நிதிநீர் வரையறை குழு ஆகியவற்றை விரைவில் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவுக்கு தமிழகம், கேரளம் சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுவிட்ட நிலையில், மத்திய அரசு உறுப்பினரை நியமித்து குழுவை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
பணிகள் தீவிரம்
அவரது கோரிக்கையை ஏற்று, உரிய நடவடிக்கை எடுக்க பிரதமர் அலுவலகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் வரையறைக் குழு அமைக்கவும், முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழு அமைக்கவும் இரண்டு குறிப்புகளை தயாரித்து நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காவிரி, முல்லைப் பெரியாறு அணை விவகாரங்களில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் ப.பாலாஜி, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
காவிரி நீரில் தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி, கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீர் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று 2007-ம் ஆண்டே தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. தமிழக அரசு எடுத்த முயற்சியின் பேரில், கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி இந்தத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்தத் தீர்ப்பை அமல்படுத்த காவிரி மேலாண்மைக் குழு மற்றும் காவிரி நீர் வரையறைக் குழுவை அமைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இதுகுறித்து பிரதமரை சந்தித்து தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
குழுவின் கட்டுப்பாட்டில் அணைகள்
இக்குழு அமைக்கப்பட்டு விட்டால், கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளும் இக்குழுவின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும். மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நீர் பங்கீட்டின் அடிப்படையில், இக்குழு நேரடியாக நீரை நான்கு மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கும்.
அதுபோல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. அதை அமல்படுத்த வேண்டும். அணையின் நீர்மட்டத்தை உயர்த்த 3 பேர் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில், தமிழகம், கேரளம் சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். மத்திய நீர்வளத்துறை உறுப்பினர் நியமிக்கப்பட்டு விட்டால், அக்குழுவின் கட்டுப்பாட்டுக்குள் அணை வந்துவிடும். அணையின் நீர்மட்டமும் உயர்த்தப்பட்டுவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
‘சேம்பரில் தள்ளுபடியாகும்’
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக கேரள அரசு அறிவித்துள்ளதே என்று கேட்டதற்கு, ‘‘இன்றைய நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக உள்ளது. ஏற்கனவே தொடரப்பட்ட மேல் முறையீடுகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து விட்டது. இதற்கு மேல் கேரள அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தால், அது நீதிபதிகளின் சேம்பரில் வைத்தே தள்ளுபடி செய்யப்பட்டு விடும்’’ என்றார்.