

அதிமுக ஆட்சியில் மின் நிலையங்களை நிறுவுவதற்கான டெண்டர் கோரினால், யாரும் விண்ணப்பிக்க முன் வருவதில்லை என்று கூறப்படுவது உண்மைதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கேள்வி - பதில் வடிவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஆட்சியில் மின் நிலையங்களை நிறுவுவதற்கான டெண்டர் கோரினால், யாரும் விண்ணப்பிக்க முன் வருவதில்லை என்று கூறப்படுவது உண்மைதான் . அதிமுக ஆட்சி 2011இல் அமைந்தவுடன் படித்த நிதி நிலை அறிக்கையில் 9,600 கோடி ரூபாய்ச் செலவில் 1,600 மெகாவாட் உப்பூர் அனல் மின் திட்டத்தைத் தொடங்கப் போவதாக படித்தார்கள்.
29-3-2012 அன்று ஜெயலலிதா பேரவையில் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட உப்பூர் அனல் மின் திட்டத்திற்கான முன்சாத்தியக் கூறு அறிக்கை மற்றும் திட்ட வரைபடம் ஆகியவை இறுதி செய்யப்பட்டு விட்டன என்று அறிவித்தார்.
திட்டம் அறிவித்து நான்காண்டுகளுக்குப் பிறகு தமிழக மின் வாரியம், உப்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பெறப்படும் என்று கடந்த ஜூலை மாதத்தில் அறிவித்தது. ஒப்பந்தப்புள்ளி சமர்பிக்க மூன்று மாதங்கள் கால அவகாசம் அளித்தும் எந்த நிறுவனங்களும் ஒப்பந்தப்புள்ளி கோர முன் வராததால், கால அவகாசத்தை இந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வரை நீடித்தது.
இரண்டு முறை ஒப்பந்தப் புள்ளி பெறுவதற்கான கடைசி தேதியை நீட்டித்தும் நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதற்கு தமிழக அரசின் தலையீடு அதிகமாக இருப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி 19-10-2015 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடைசியாக உப்பூர் மின் நிலையத்திற்கு, மத்திய அரசின் பெல் மற்றும் தூசன் நிறுவனங்களும், வடசென்னை மின் நிலையத்திற்கு பெல் நிறுவனமும் மட்டும் தான் ஒப்பந்தப்புள்ளி தாக்கல் செய்துள்ளதாம்.
டெண்டரில் பங்கேற்க ஏன் பல நிறுவனங்கள் வரவில்லை என்று விசாரித்த போது, “மின் வாரியப் பணிகளை டெண்டர் எடுக்க, திட்ட மதிப்பு தவிர்த்து, தனி நபர்களுக்காக செலவு செய்ய வேண்டியுள்ளது, அதனால் முதலீட்டாளர்கள் வரத் தயங்குகின்றனர்” என்று கூறுகிறார்கள்.
2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கே இந்தக் கதி என்றால், 2014ஆம் ஆண்டிலும், 2015ஆம் ஆண்டிலும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் எல்லாம் வெறும் வாய்ச் சவடால்தானா ? என்ற கேள்வி எழத்தானே செய்யும்.
இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.