

கரோனா பெருந்தொற்று காலத்தில் கடுமையாக உழைத்த சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் 700 பேர் திடீரென வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், கரோனா நேரத்தில் நாடே அவர்களை பூஜித்தது, அவர்களுக்கு நாம் காட்டும் நன்றிக்கடன் இதுதானா என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா பெருந்தொற்று தமிழகத்தை தாக்கிய போது மார்ச் 24 அன்று முழு ஊரடங்கு அமலானது. பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கரோனா தொற்று வேகமாக பரவியது. கரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
கரோனா பெருந்தொற்றுக்கெதிராக முன்களப்பணியாளர்கள் எனப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள், தூய்மைப்பணியாளர்கள் கடுமையாக போராடினர். முன் களப்பணியாளர்கள் குறைந்த ஊதியத்தில் குடிசைப்பகுதிகளில் வசித்துக்கொண்டே நகரைச் சுத்தமாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் அவர்களை நாடே பூஜித்தது. குப்பையை அள்ளுகிறவர்கள் தானே என இளக்காரமாக பார்த்தவர்கள் தேடித்தேடி தூய்மைப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பூஜித்தனர், அவர்களுக்கு பாதபூஜை செய்தனர், மாடியிலிருந்து மலர் தூவினர். சமூக வலைதளங்களில் துப்புரவாளர் பணி பெரிதும் போற்றப்பட்டது. நிஜ ஹீரோக்கள் என கொண்டாடினர்.
சென்னை தமிழகத்தின் மிகப்பெரிய தொற்றுப்பகுதியாக ஏன் இந்தியாவில் பல மாநிலங்களின் தொற்றைவிட சென்னையின் தொற்று மிக அதிகமாக இருந்தது. சென்னையில் துப்புரவுப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்றில் கடுமையாக போராடிய முன் களப்பணியாளர்கள் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் சுமார் 700 பேர் வேலை திடீரென பறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தூய்மைப்பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வேலை எக்காரணமும் கூறப்படாமல் பறிக்கப்பட்டுள்ளது.
குப்பை அள்ளும் பணி தனியாருக்கு கொடுக்கப்பட்டதாலேயே அவர்கள் பணி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற மண்டலங்களை தனியார் குப்பை அள்ளும் நிறுவனங்கள் காண்டிராக்ட் எடுத்ததால் அங்குள்ள நிரந்தப்பணியாளர்களை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இதனால் அங்கு பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாள் வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் நேற்று அனைவரும் மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அவர்களுக்கு பணி வழங்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்து திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:
“கோவிட் போர் வீரர்கள் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டாலும், இந்த இபிஎஸ் அரசு சென்னையில் 700 துப்புரவு தொழிலாளர்களின் வேலையை பறித்துள்ளது.
நாம் பெருந்தொற்றின்போது அவர்களை சார்ந்து இருந்தபோதும், அவர்களுக்கு உரிய நேரம் தரப்படாமல் அதுவும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள இந்தக் காலக்கட்டத்தில் இது மிகவும் மோசமான செயல்.
பொங்கலுக்கு முன்பாக நாம் அவர்களுக்கு காட்டும் நன்றி இதுதான்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.