

ஓசூர் மலர்ச் சந்தையில் பொங்கல் தைத் திருநாளை முன்னிட்டு மல்லிகைப் பூ, சாமந்தி, பட்டன் ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதனால் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓசூர், தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை,பாகலூர், மத்திகிரி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இதமான தட்பவெட்பநிலை மற்றும் வளமான மண் காரணமாக ரோஜா, பட்டன் ரோஜா, மல்லி, சாமந்தி, கனகாம்பரம், சம்பங்கி மற்றும் அலங்காரப் பூக்களான கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட பல்வேறு மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் வாசமிக்க, தரமான மலர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது.
இப்பகுதியில் பசுமைக் குடில் அமைத்தும் மற்றும் திறந்த வெளியிலும் சொட்டுநீர்ப் பாசன முறையில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலர் சாகுபடியில் 3 ஆயிரம் சிறிய விவசாயிகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய விவசாயிகளும் என மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஓசூர் பகுதியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாகப் பூக்களின் உற்பத்தி குறைந்து, விலை உயர்ந்துள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் மலர்ச் சந்தையில் பூக்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஓசூர் மலர்ச் சந்தை மொத்த வியாபாரிகள் கூறும்போது, ''ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் அதிகளவு பனிப்பொழிவு காரணமாக மலர்கள் மொட்டிலேயே கருகி, பூக்களின் உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு மலர்களின் வரத்து வெகுவாகக் குறைந்து விலை உயர்ந்துள்ளது.
மேலும் தற்போது தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சந்தையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டன் ரோஜாவின் விலை ரூ.200 ஆகவும், அதேபோல ரூ.1,500-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிப்பூவின் விலை ரூ.2,500 வரையும் என இரண்டு மடங்கு விலை உயர்ந்துள்ளது.
அதேபோல முல்லை - ரூ.800-லிருந்து ரூ.1,600-க்கும், சம்பங்கி - ரூ.50-லிருந்து ரூ.120-க்கும், சாமந்தி - ரூ.120-லிருந்து ரூ.200 முதல் ரூ.250-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-லிருந்து ரூ.2,000 வரையும் விலை உயர்ந்துள்ளது. ஓசூர் மலர்ச் சந்தையில் விலை அதிகரித்துள்ள நிலையிலும், ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறு வியாபாரிகள் அதிகளவில் மலர்களை வாங்கிச் செல்வதால் பொங்கல் விற்பனை சூடுபிடித்துள்ளது. பொங்கல் தினத்தன்று மேலும் விலை உயர வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தனர்.