எலியட்ஸ் கடற்கரையில் கார்கள் இல்லாத ஞாயிறு: நாள் முழுவதும் நடத்த கோரிக்கை

எலியட்ஸ் கடற்கரையில் கார்கள் இல்லாத ஞாயிறு: நாள் முழுவதும் நடத்த கோரிக்கை

Published on

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை யில் கார்கள் இல்லாத ஞாயிறு நிகழ்ச்சியை நாள் முழுவதும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாநகரப் பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்கும், பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதற்கும் பொது இடங்கள் குறைந்துவிட்டன. அதனால் பொது இடம் ஒன்றை உருவாக்கும் விதமாக, “நம்ம சென்னை நமக்கே” என்ற கருப்பொருளுடன், ‘தி இந்து’ நாளிதழ், சென்னை மாநகராட்சி, சென்னை மாநகர காவல்துறை, போக்குவரத்து மற்றும் வளர்ச்சிக் கொள்கை நிறுவனம் சார்பில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி சென்னையில் முதன்முறையாக பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் ‘கார்கள் இல்லாத ஞாயிறு’ கடைபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து 3-வது வாரமாக கார்கள் இல்லாத ஞாயிறு நேற்றும் நடைபெற்றது. இதில் காலை 6 மணி முதல் 9 மணி வரை வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் உடற் பயிற்சி உபகரணங்கள் விற்பனை நிறுவனங்கள் பங்கேற்று யோகா பயிற்சி, நடனத்தின் மூலம் உடற் பயிற்சி ஆகியவற்றை கற்றுக் கொடுத்தன. அப்பகுதியைச் சேர்ந்த குடிசைப் பகுதி சிறுவர்களும் ஆர்வமாக இதில் பங்கேற்றனர்.

பின்னர் இசைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் நடனமாடி மகிழ்ந்தனர். சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் வகை யில் அங்கு ஓட்டுவதற்கு சைக்கிள் கள் இலவசமாக வழங்கப்பட்டன.

குழந்தைகளுடன் பங்கேற்ற பெற்றோர்கள் பலர் இந்த நிகழ்வை நாள் முழுவதும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நிகழ்ச்சிகளில் கைக்குழந்தையுடன் பங்கேற்று விளையாடி மகிழ்ந்த எஸ்.நடராஜன்- நிர்திகா தம்பதியர் கூறும்போது, “இதுபோன்ற நிகழ்வு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே பிரபலம். சென்னையிலும் நடைபெறுவது வியப்பாக உள்ளது. இதன் மூலம் இங்கு நல்ல சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இந்த சாலையில் வாகனங் கள் வேகமாக சென்ற வண்ணம் இருக்கும். இந்த நிகழ்வு குறித்து கேள்விப்பட்டு வந்திருக்கிறோம். எந்தவித அச்சமும் இன்றி சுதந்திரமாக குழந்தையை தள்ளு வண்டியில் வைத்து சாலையில் அழைத்துச் செல்கிறோம். குழந்தை யுடன் விளையாடி மகிழ்கிறோம். இதற்காக ஒரு இடத்தை மாநகரப் பகுதியில் உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘தி இந்து’ மற்றும் சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. 3 மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்வை நாள் முழுவதும் நடத்த வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in