

ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6 பேருக்குத் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பளித்தது.
கோவையை அடுத்த கோவைப்புதூரில் 2011-ம் ஆண்டு 'ஏசியன் ஈமு ஃபார்ம்ஸ்' என்ற பெயரில் ஈமு கோழி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் இயக்குனர்களாக கோவை சுக்கிரவார் பேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன், ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த சிவக்குமார், பொன்னைய ராஜபுரத்தைச் சேர்ந்த சுதீஷ், ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்த மற்றொரு சிவக்குமார், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பிரான்சிஸ், பாலக்காட்டைச் சேர்ந்த சிவன் ஆகியோர் இருந்துள்ளனர்.
தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஊக்கத்தொகை, போனஸ் போன்றவற்றை வழங்குவதாகக் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளனர். இதை நம்பிக் கோவை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 35 பேர் இந்தத் திட்டத்தில் ரூ.68.46 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தபடி அவர்களுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை.
இந்த மோசடி தொடர்பாகக் குனியமுத்தூர், இடையர்பாளையத்தைச் சேர்ந்த செங்காளியப்பன் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவை மாநகரப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சுப்பிரமணியன், சிவக்குமார், சுதீஷ், மற்றொரு சிவக்குமார், பிரான்சிஸ், சிவன் ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.18.90 லட்சம் அபராதம் விதித்ததோடு, அதில் ரூ.18 லட்சத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கச் சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டார்.