Published : 12 Jan 2021 06:30 PM
Last Updated : 12 Jan 2021 06:30 PM

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி மீது சிசிபி போலீஸார் வழக்குப்பதிவு

சென்னை

முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி குறித்து விமர்சித்துப் பேசினார். முதல்வர் பழனிசாமியை எப்போதும் அவரது ஊரைக் குறிப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசியதையும், சசிகலா காலில் முதல்வர் பழனிசாமி விழுந்து பதவி பெற்றார் என்று விமர்சித்துப் பேசியதையும் பலரும் கண்டித்தனர்.

உதயநிதியின் பேச்சுக்கு பாஜக மகளிர் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. சமூக வலைதளங்களில் பலரும் கண்டித்துப் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில், தான் பேசியதற்கு உதயநிதி வருத்தம் தெரிவித்திருந்தார்.

தேர்தல் நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசுவது பெண்கள் மத்தியில் திமுகவுக்கு அவப்பெயர் உண்டாக்கும் செயல் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் உதயநிதி மீது புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், ''சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக உதயநிதி ஸ்டாலின் பேசினார். பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் அநாகரிகமான முறையில் பேசினார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.

அவரது புகாரை ஏற்று, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வந்தனர். இது தொடர்பாக ராஜலட்சுமி அளித்திருந்த வீடியோ காட்சியையும் ஆய்வு செய்தனர். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஐபிசி பிரிவு 153 (கலகம் விளைவிக்கும் வகையில் ஒன்று கூடுதல்), 294(பி) (அவதூறாகப் பேசுதல்), 509 (பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுவது, எழுதுவது, சைகை) 67 ஐடி ஆக்ட் (ஒரு நபரைப் பற்றி அவதூறாகப் பரப்புதல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x