

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை மாநகராட்சி, தனிமாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
தமிழக மக்கள் மன்ற மாநிலத் தலைவர் ராசகுமார் தலைமை வகித்தார். அமமுக மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, இந்திய கம்யூ., நகரச் செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சங்கு உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக மக்கள் மன்றச் செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
போராட்டத்திற்கு பிறகு ராசகுமார் கூறியதாவது: பாரம்பரிய நகரமாகவும், சுற்றுலாதலமாகவும் இருக்கும் காரைக்குடிக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரம் பேர் வந்து செல்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே காரைக்குடி நகராட்சியாக மாறியது. அதை மாநகராட்சியாகவும் மற்றும் தனி மாவட்டமாகவும் உருவாக்கி தலைநகராகவும் அறிவிக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் சமீபத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் காரைக்குடி மக்களின் கோரிக்கையை ஏற்கவில்லை.
எம்பி, எம்எல்ஏ எதிர்க்கட்சியாக இருப்பதால் காரைக்குடியை அரசு புறக்கணிக்கிறது. பாதாளச் சாக்கடைத் திட்டம் முடிவடையாததால் காரைக்குடி சாலைகள் முழுவதும் மோசமாக உள்ளன. அதை சீர்படுத்த உடனடியாக சிறப்பு நிதியாக ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும், என்று கூறினார்.