

"கிராமசபைக் கூட்டத்தையே திமுக அசிங்கப்படுத்தி வருகிறது" என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கையில் மானியவிலை இருசக்கர வாகனம் வழங்கும் விழா, மானாமதுரை அருகே மிளகனூரில் மினி கிளினிக் தொடக்க விழா நடந்தன.
விழாவில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் நான் போகாத ஊரும் இல்லை. பணி செய்யாத ஊரும் இல்லை. நான் தினமும் 200 பேரை சந்தித்து குறைகளைக் கேட்கிறேன். எந்தக் குறையாக இருந்தாலும் என்னை சந்திக்கலாம்.
பொதுக்கூட்டத்தை நடத்தி ஆளும்கட்சியினர் மீது குறை சொன்னால், நாங்கள் பதில் சொல்வோம். அதைவிடுத்து கிராமசபைக் கூட்டத்தையே திமுக அசிங்கப்படுத்தி வருகிறது.
கூட்டம் நடத்தி மு.க.ஸ்டாலின் அவரது தந்தை சம்பாரித்த சொத்தை எதுவும் மக்களுக்கு கொடுக்கப் போகிறாரா. அவர்கள் ஆளும்கட்சியாகவே இல்லையே.
அப்புறம் எதற்கு நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. முக்கிய தினங்களில் நடத்துவது தான் கிராமசபைக் கூட்டம். அதில் கிராமமக்கள் தங்களது குறைகளைத் தீர்மானமாக நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவர், என்று பேசினார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘அதிமுக அரசில் பெண்களுக்குப் பாதுகப்பு இல்லை,’ என்று கனிமொழி கூறியுள்ளார்.
ஆனால் பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் சொந்தக் கட்சியினர் மீதே அதிமுக நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை வழங்கியதும் எங்கள் அரசு தான்.
சிவகங்கை மாவட்டத்தில் பயிர் பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். முதல்வரிடம் பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பேன், என்று கூறினார்.
மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, எம்எல்ஏ நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மகளிர் திட்ட இயக்குநர் அருள்மணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.