Published : 12 Jan 2021 05:23 PM
Last Updated : 12 Jan 2021 05:23 PM

பொங்கல் விடுமுறையில் சுற்றுலாத் தளங்களில் பொதுமக்கள் கூடத் தடை; ஜன.15,16,17 தேதிகளில் அமல்: தமிழக அரசு உத்தரவு

சென்னை

கரோனா தொற்று காரணமாக பொங்கல் விடுமுறை நாட்களான ஜன.15,16,17 ஆகிய தேதிகளில், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். கரோனா தொற்று முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில் முகக்கவசம், சமூக இடைவெளியை அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், உருமாற்ற கரோனா வைரஸ் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.

பொதுமக்கள் ஒன்றாகக் கூடும் நிகழ்வுகளால் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதால் திரையரங்கு உள்ளிட்டவை முழு இருக்கைகளுடன் செயல்படத் தடை நீடிக்கிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சுற்றுலாத் தலங்களில் லட்சக்கணக்கில் பொதுமக்கள் ஒன்று கூடுவார்கள். இதனால் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதைக் கருத்தில் கொண்டு, காணும் பொங்கலன்று மட்டும் பொதுமக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அது 3 நாட்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்கள், சென்னை கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா உள்ளிட்ட அனைத்துக் கடற்கரைகளிலும், பொங்கல் விடுமுறை தினங்களை ஒட்டி வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் மட்டும், பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் அரசு உத்தரவை மதித்து வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x