Last Updated : 12 Jan, 2021 04:19 PM

 

Published : 12 Jan 2021 04:19 PM
Last Updated : 12 Jan 2021 04:19 PM

தொடர் மழையால் தென்காசி பாவூர்சத்திரம் சந்தையில் பொங்கல் பண்டிகை வியாபாரம் மந்தம்

தொடர் மழையால் பொங்கல் பண்டிகையையொட்டி தென்காசி பாவூர்சத்திரம் சந்தையில் வியாபாரம் மந்தமடைந்துள்ளது. வரத்து அதிகரிப்பு காரணமாக பெரும்பாலான காய்கறிகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

கேரளாவில் நடைபெறும் ஓணம் பண்டிகையையொட்டியும், தமிழகத்தில் நடைபெறும் பொங்கல் பண்டிகையையொட்டியும் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் காய்கறிகள் வியாபாரம் களைகட்டும்.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி கரோனா தொற்று பரவல் காரணமாக பாவூர்சத்திரம் சந்தையில் காய்கறிகள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பண்டியை வியாபாரமாவது கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகள் இருந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் மேலும் கூறும்போது, “பொங்கல் பண்டிகையையாட்டி புதுமணத் தம்பதிகளுக்கு பொங்கல்படியாக சீர்வரிசைப் பொருட்களை வாங்கிச் செல்லும் பெண் வீட்டினர் காய்கறிகளையும் வாங்கிக் கொடுப்பது வழக்கம்.

இதனால் பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் முன்பிருந்தே காய்கறிகள் வியாபாரம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டில் தொடர் மழையால் காய்கறிகள் வியாபாரம் மந்தமடைந்துள்ளது.

காய்கறிகள் வரத்து அதிகமாக உள்ளது. வியாபாரம் மந்தமாக இருப்பதால் பெரும்பாலான காய்கறிகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டியையொட்டி ஒரு கிலோ வள்ளிக்கிழங்கு 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனையானது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 ரூபாய்க்கு மேல் விற்பனையாக வள்ளிக்கிழங்கு தற்போது 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. பிடி கிழங்கு கடந்த ஆண்டு 80 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கேரட் 20 ரூபாயாக உள்ளது. மழையில் நனைந்து சேதமடைந்ததால் சின்ன வெங்காயம் 7 முதல் 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நல்ல தரமான சின்ன வெங்காயம் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கத்தரிக்காய் 40 முதல் 50 ரூபாய் வரையும், சேனைக்கிழங்கு 10 முதல் 15 ரூபாய் வரையும், தக்காளி 10 முதல் 12 ரூபாய் வரையும், மாங்காய் 10 முதல் 15 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

மிளகாய் 15 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 30 ரூபாய்க்கும், சீனிஅவரைக்காய் 10 ரூபாய்க்கும், புடலங்காய் 10 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 30 முதல் 40 ரூபாய் வரையும், உருளைக்கிழங்கு 30 முதல் 35 ரூபாய் வரையும் விற்பனையாகிறது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x