Published : 12 Jan 2021 04:04 PM
Last Updated : 12 Jan 2021 04:04 PM

மாஸ்டர் திரைப்படத்துக்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

கோவில்பட்டி

மாஸ்டர் திரைப்படத்துக்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, "கரோனா காலத்தையொட்டி திரையரங்குகள் இயங்காமல் இருந்தபோது எந்த வரியும் விதிக்கப்படவில்லை. கேளிக்கை வரியை ரத்து செய்வது குறித்த திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் நல்ல முடிவை அறிவிப்பார்.

பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர் திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முறைப்படுத்தப்பட்ட கட்டணம் தான் வாங்க வேண்டும் என்பது அரசின் விதி. அதை மீறி நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

திரையரங்குகளில் தட்கல் டிக்கெட் வழங்கும் முறை செயல்படுத்துவது தொடர்பாக, தமிழக முதல்வரின் ஆலோசனையின் பேரில் நான், வணிகவரித்துறை அமைச்சர், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். தட்கல் டிக்கெட் எவ்வளவு நிர்ணயம் செய்யலாம் என திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடமும் கேட்டுள்ளோம். இந்தத் திட்டம் பரிசீலனையில் உள்ளது. கூடிய விரைவில் திரையரங்குகளுக்கான தட்கல் டிக்கெட் முறை அமல்படுத்தப்படும்.

நடிகர் கமல்ஹாசன் அரசியல் வந்ததற்கு ஏதாவது சொல்ல வேண்டும். அதிமுக நல்லாட்சி வழங்கியதால் தான் 1977-ல் இருந்து 10 முறை தேர்தலை சந்தித்து அதில் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. நல்லாட்சி வழங்கியதால் தான் மக்கள் ஆட்சிக்கு கொண்டு வருகின்றனர்.

மக்களை ஏமாளிகள், விபரமில்லாதவர்கள் எனக் கூறுகிறாரா?. கமல்ஹாசனுக்கு தக்க பாடத்தை புகட்டி, அரசியலுக்கு லாயக்கில்லை என மக்களால் விரட்டப்படக்கூடிய தேர்தலாக அமையும். அவர் அதிமுகவைப்பற்றி கூறவில்லை.

இவரை மக்கள் விரும்பி அரசியலுக்கு அழைத்தனரா?. அரசியல் கட்சி தொடங்கியதற்கு ஒரு சாக்குபோக்கு சொல்ல வேண்டும். இந்தத் தேர்தல் கமல்ஹாசனுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்" என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x