Published : 12 Jan 2021 11:07 AM
Last Updated : 12 Jan 2021 11:07 AM

திரையரங்குகளுக்கு வரிச் சலுகை, மின் கட்டணச் சலுகை; கேரள அரசை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்: ஸ்டாலின்  

சென்னை

திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். அதனைக் கருத்தில் கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி மின் கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அதிமுக அரசு வழங்கிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, கரோனா பரவலின் தொடக்கத்திலிருந்தே எல்லா வகையிலும் முழு முனைப்புடன் மக்கள் நலனைக் காத்து வருவதில் தேவையான அக்கறை செலுத்தி வருகிறது. பேரிடர் காலத்தில், அனைத்துத் துறைகளும் - அனைத்துத் தொழில்களும் வருமான இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கான வரிச் சலுகைகளையும் கால அவகாசத்தையும் கேரள அரசு வழங்கி வருகிறது.

அதனடிப்படையில், திரைத்துறைக்கான சலுகைகளையும் கேரள இடதுசாரி அரசு அறிவித்துள்ளது. வருகிற மார்ச் 31 வரை உள்ளாட்சி கேளிக்கை வரிகள் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 மாதங்களுக்கான திரையரங்க மின் கட்டணம் 50% தள்ளுபடி எனவும் அறிவித்துள்ளது. சொத்து வரி செலுத்தவும் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள அரசு.

தமிழகத்தில் திரைத்துறையைக் கனவுத் தொழிற்சாலை என அழைக்கின்றனர். பல ஆயிரம் குடும்பத்தினருக்கு வாழ்வளித்து வந்த திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். அதனைக் கருத்தில் கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி மின் கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அதிமுக அரசு வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

திரைத்துறை மட்டுமின்றி, கரோனா பேரிடர் காலத்தில் பாதிப்பிற்குள்ளான அனைத்துத் தொழில் சார்ந்த குடும்பத்தினரும் தங்கள் வாழ்வாதாரத்தினை மீட்டிடும் வகையில் இத்தகைய சலுகைகளை வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x