Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ, முத்தரசன் உட்பட 300 பேர் கைது

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பை கண்டித்து, மதிமுக சார்பில் வைகோ தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. இதில், திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், விசிக சார்பில் வன்னி அரசு, மமக தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு

சென்னை

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ, முத்தரசன் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் சமீபத்தில் இடிக்கப்பட்டது. இதைக்கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். அதன்படி, நுங்கம்பாக்கம் புஷ்பாநகர் குளக்கரை சாலை, மகாலிங்கபுரம் பிரதான சந்திப்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உட்பட 13 கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள்300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி வைகோ பேசியதாவது:

இலங்கைத் தமிழரின் வரலாறு சொல்லும் எச்சங்களை அழித் தொழிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை ராணுவம் ஈடுபட்டு வருகிறது. கிளிநொச்சி உட்பட அந்நாட்டில் பல இடங்களில் போர் வெற்றிகளை குறிக்கும் வகையில் ஸ்தூபிகளை ராணுவத்தினர் அமைத்துள்ளனர். தற்போது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை இடித்து தள்ளியிருப்பதன் மூலம், கந்தக கிடங்கில் நெருப்புப் பொறியை விழச் செய்திருக்கிறார்கள். இவ்வளவு நடந்த பிறகும் இந்திய அரசு இலங்கையை கண்டிக்காமல் இருக்கிறது. இன்று இந்த போராட்டம் முடக்கப்படலாம். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக எதிர்காலத்தில் இளைஞர் படை எழுச்சியுடன் போராடும். அந்த நாள் நிச்சயம் வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முத்தரசன் பேசும்போது, ‘‘முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை சென்று திரும்பிய ஓரிரு நாளில் இந்த அக்கிரமம் நிகழ்ந்திருக்கிறது. ஓர் இனத்தையே அழித்துவிட்டு, கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் அதற்கான ஆவணங்களையும் அழிக்கமுனைகின்றனர். இதை தடுக்காவிட்டால் பெரிய விளைவுகளை தமிழர்கள் அங்கே எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்’’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடச் சென்றனர். அதைத் தொடர்ந்து வைகோ,முத்தரசன் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து சூளைமேட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். அவர்களை மாலையில் விடுவித்தனர். போராட்டத்தை முன்னிட்டு இலங்கை தூதரகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x